குரோஷியா அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி - ஐஸ்லாந்தை வெளியேற்றியது

உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.

Update: 2018-06-27 23:00 GMT
ரோஸ்டாவ்ஆன்-டான்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரோஸ்டாவ் ஆன்-டான் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘டி’ பிரிவு கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் குரோஷியா-ஐஸ்லாந்து அணிகள் மோதின. குரோஷியா அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. குறைந்த மக்கள் தொகையை கொண்ட நாடான ஐஸ்லாந்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று, அதே நேரத்தில் அர்ஜென்டினா-நைஜீரியா அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு சாதகமாக அமைந்தால் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் களம் கண்டது.

தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க அதிக ஆர்வம் காட்டினாலும், முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. இரு அணியினருக்கும் கிடைத்த சில வாய்ப்புகளை கோல் எல்லைக்கு வெளியில் அடித்து வீணாக்கினார்கள்.

53-வது நிமிடத்தில் குரோஷியா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் மிலன் பாடெல்ஜ் இந்த கோலை அடித்தார். 75-வது நிமிடத்தில் குரோஷியா அணியின் பின்கள வீரர் கோல் எல்லையில் வைத்து பந்தை கையினால் கையாண்டதால் ஐஸ்லாந்து அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் சிகுர்ட்சன் பதில் கோல் திருப்பினார்.

இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) குரோஷியா அணி 2-வது கோல் போட்டது. அந்த அணி வீரர் இவான் பெரிசிச் இந்த கோலை அடித்தார். முடிவில் குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்தியது.

குரோஷியா அணி தனது 3 லீக் ஆட்டங்களிலும் (ஹாட்ரிக்) வெற்றி பெற்று ‘டி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. தோல்வி கண்ட ஐஸ்லாந்து அணி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்து வெளியேறியது. லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவுடன் டிரா கண்டு இருந்ததால் ஐஸ்லாந்து அணி மீது ஏற்பட்ட எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

அடுத்த சுற்று ஆட்டத்தில் குரோஷியா அணி, ‘சி’ பிரிவில் 2-வது இடம் பெற்ற டென்மார்க் அணியை (ஜூலை 1-ந் தேதி) சந்திக்கிறது.

மேலும் செய்திகள்