கால்பந்து
2-2 கோல் கணக்கில் கோஸ்டாரிகாவுடன் டிரா: சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவுடன் டிரா கண்ட சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நிஸ்னி நவ்கோரோட்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நிஸ்னி நவ்கோரோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘இ’ பிரிவு கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து-கோஸ்டாரிகா அணிகள் மோதின. டிரா செய்தாலே அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடலாம் என்ற நிலையில் சுவிட்சர்லாந்து அணியும், வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலையில் கோஸ்டாரிகா அணியும் களம் கண்டன.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து சுவிட்சர்லாந்து அணியின் கட்டுப்பாட்டில் அதிக நேரம் இருந்தாலும், கோஸ்டாரிகா அணி தான் கோலை நோக்கி அதிக முறை தாக்குதல் நடத்தியது. அதனை சுவிட்சர்லாந்து அணியின் கோல்கீப்பர் யாம் சோமேர் அருமையாக தடுத்து நிறுத்தினார். 31-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் பிளெரிம் டெஸ்மெய்லி இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

56-வது நிமிடத்தில் கோஸ்டாரிகா அணி பதில் கோல் திருப்பி சமநிலையை எட்டியது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோஸ்டாரிகா அணி வீரர் ஜோயல் கேம்ப்பெல் கோலை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் கென்டால் வாஸ்டன் தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி 2-வது கோல் அடித்தது. அந்த அணியின் மாற்று ஆட்டக்காரர் ஜோசிப் டிரிமிக் இந்த கோலை அடித்தார்.

சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெறும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் நேரத்தில் (இஞ்சுரி டைம்), கோல் எல்லையில் வைத்து கோஸ்டாரிகா வீரரை, சுவிட்சர்லாந்து வீரர் ‘பவுல்’ செய்தார். இதனால் கோஸ்டாரிகா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்தி கோஸ்டாரிகா அணியின் கேப்டன் பிரையன் ரூஸ் கோலை நோக்கி பந்தை வேகமாக உதைத்தார். ஆனால் அந்த பந்து கோல் கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு திரும்பியது. அப்போது துள்ளிக்குதித்து பந்தை தடுக்க முயற்சித்து கீழே விழுந்த சுவிட்சர்லாந்து அணியின் கோல் கீப்பர் சோமேரின் பின் தலையில் பட்டு பந்து கோலுக்குள் சென்று சுயகோலாக மாறியது.

இதனால் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. லீக் ஆட்டம் முடிவில் ஒரு வெற்றி, 2 டிராவுடன் சுவிட்சர்லாந்து அணி தனது பிரிவில் 2-வது இடம் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கோஸ்டாரிகா அணி ஒரு டிரா, 2 தோல்வியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

சுவிட்சர்லாந்து அணி தனது அடுத்த சுற்று ஆட்டத்தில், ‘எப்’ பிரிவில் முதலிடம் பிடித்த சுவீடனை (ஜூலை 3-ந் தேதி) எதிர்கொள்கிறது.

மாஸ்கோ,  21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 48 ஆட்டங்கள் நடந்துள்ளன. எஞ்சிய 16 ஆட்டங்கள் தான் உலக சாம்பியன் யார்? என்பதை தீர்மானிக்கப் போகிறது.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை முதல் 2-வது சுற்று (நாக்-அவுட்) ஆட்டங்கள் நடக்கின்றன. நாளை நடக்கும் 2-வது சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ்-அர்ஜென்டினா (இரவு 7.30 மணி), உருகுவே-போர்ச்சுகல் (நள்ளிரவு 11.30 மணி) அணிகள் மோதுகின்றன.