2-வது சுற்றில் அர்ஜென்டினா-பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Update: 2018-06-29 23:30 GMT
கஜன்,

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்ற 32 அணிகளில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறியுள்ளன. அதிர்ச்சிகரமாக நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து நுழைந்த 14 அணிகளில் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், ரஷியா, குரோஷியா, டென்மார்க், சுவீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய 10 அணிகள் 2-வது சுற்றை எட்டியுள்ளன. தென்அமெரிக்க கண்டத்தில் இருந்து பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே, கொலம்பியா ஆகிய அணிகளும், வடஅமெரிக்க கண்டத்தில் இருந்து மெக்சிகோவும் 2-வது சுற்றுக்கு வந்துள்ளன. ஆசிய கண்டத்தில் இருந்து பங்கேற்ற 5 அணிகளில் ஜப்பான் மட்டும் தப்பியிருக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அடியெடுத்து வைத்த 5 அணிகளும் முதல் சுற்றை தாண்டவில்லை.

லீக் போட்டி முடிந்த நிலையில் 2-வது சுற்று ஆட்டங்கள் இன்று (சனிக்கிழமை) தொடங்குகின்றன. இதில் இருந்து ‘தோற்கும் அணிகள்’ வெளியேறும் என்பதால் இனிதான் ஒவ்வொரு அணிக்கும் களத்தில் உண்மையான சோதனை காத்திருக்கிறது. அதாவது இனி வழக்கமான நேரத்தில் இரு அணிகளும் சமநிலை வகித்தால் முடிவை அறிய கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதிலும் சமநிலை நீடித்தால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்படும். மேலும் நாக்-அவுட் சுற்றில் இருந்து புதிய வகை பந்து பயன்படுத்தப்படுகிறது.

‘சி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரான்ஸ் அணி, ‘டி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற அர்ஜென்டினாவுடன் இன்று கஜன் நகரில் பலப்பரீட்சையில் இறங்குகிறது.

1978, 1986-ம் ஆண்டு சாம்பியனான அர்ஜென்டினா அணி லீக் சுற்றை பெரும்பாடு பட்டே கடந்தது. லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவற விட்டதன் மூலம் ஐஸ்லாந்துடன் டிரா செய்ய நேரிட்ட அர்ஜென்டினா 2-வது லீக்கில் 0-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது. ஒரு வழியாக கடைசி லீக்கில் நைஜீரியாவை (2-1) வீழ்த்திய பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

முந்தைய ஆட்டத்தில் கேப்டன் மெஸ்சி கோல் அடித்தது அர்ஜென்டினாவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. மெஸ்சி, ஏஞ்சல் டி மரியா, மார்கஸ் ரோஜோ ஆகிய மும்மூர்த்திகள் கலக்கினால், பிரான்சின் கோட்டையை சுலபமாக உடைத்து விட முடியும்.

1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி தனது லீக் சுற்றில் ஆஸ்திரேலியா (2-1), பெரு (1-0) அணிகளை தோற்கடித்து, டென்மார்க்குடன் (0-0) டிரா கண்டது. லீக் பிரிவில் பிரான்ஸ் அணி பெரிய அளவில் நெருக்கடியை சந்திக்கவில்லை. ஐரோப்பிய கால்பந்து தொடரில் 6 கோல்கள் அடித்து பிரமாதப்படுத்திய ஆன்டோன் கிரிஸ்மான் இன்னும் முழு பார்முக்கு வரவில்லை. அவரும், பால் போக்பா, பாப்பே, ஆலிவர் ஜீருட்டும் இந்த ஆட்டத்தில் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். இளமையும், அனுபவமும் கலந்த பிரான்ஸ் மனஉறுதி மிக்க அணியாகும். அதனால் அர்ஜென்டினாவுக்கு எல்லா வகையிலும் போக்கு காட்டுவதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள். பிரான்ஸ் அணி கடந்த 40 ஆண்டுகளில் தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிக்கு எதிராக உலக கோப்பை போட்டியில் தோற்றதில்லை. அந்த பெருமையை தக்கவைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எப்படி என்றாலும் ஒரு சாம்பியன் அணி ‘அவுட்’ ஆவது உறுதி என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பிரான்ஸ் 2 ஆட்டத்திலும், அர்ஜென்டினா 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2, சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

லீக் சுற்று முடிவில்...

உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்று நிறைவு பெற்று விட்டது. அதில் இருந்து சில புள்ளி விவரம் வருமாறு:-

லீக் ஆட்டங்கள் 4 8

கோல் 1 2 2 (சராசரி 2.5)

சுயகோல் 9

பெனால்டி வாய்ப்பு 2 4

மஞ்சள் அட்டை 1 5 8

சிவப்பு அட்டை 3

அதிககோல் அடித்தவர் -

இங்கிலாந்தின் ஹாரிகேன்-5

அதிக முறை கோலுக்கு முயற்சித்த வீரர் - பிரேசிலின்

நெய்மார் (17 ஷாட்)

மேலும் செய்திகள்