கால்பந்து
‘உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடிக்க விரும்புகிறேன்’ - பெல்ஜியம் வீரர் மெர்டென்ஸ்

நண்பர்களுக்கு இலவசமாக டி.வி. கிடைக்க உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடிக்க விரும்புகிறேன் என பெல்ஜியம் வீரர் மெர்டென்ஸ் கூறினார்.
மாஸ்கோ,

நடப்பு உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரில் பெல்ஜியம் அணி தனது 3 லீக் ஆட்டங்களில் மொத்தம் 9 கோல்கள் அடித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பெல்ஜியம் அணி தனது அடுத்த சுற்று (நாக்-அவுட்) ஆட்டத்தில் நாளை ஜப்பானை சந்திக்கிறது. இதற்கிடையே உலக கோப்பை போட்டியில் பெல்ஜியம் அணி 15 கோல்களுக்கு மேல் அடித்தால், உலக கோப்பை போட்டிக்காக தங்களிடம் டி.வி. வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய பணம் திரும்ப அளிக்கப்படும் என்று பெல்ஜியம் நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை நிறுவனம் ஒன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து பெல்ஜியம் அணியின் முன்கள வீரர் டிரைஸ் மெர்டென்ஸ்சிடம் கருத்து கேட்ட போது, ‘எனது நண்பர்கள் உலக கோப்பை போட்டியை பார்ப்பதற்காக புதிய டி.வி. வாங்கி இருக்கிறார்கள். எனவே விற்பனை நிறுவனத்தின் சலுகை அறிவிப்பு குறித்து நான் சிந்தித்து வருகிறேன். எனது நண்பர்களுக்கு இலவசமாக டி.வி. கிடைக்க வகை செய்வதற்காக இந்த போட்டியில் அதிக கோல்கள் அடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்’ என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.