கால்இறுதியில் இங்கிலாந்து-சுவீடன் இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சமாரா நகரில் அரங்கேறும் 3-வது கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, சுவீடனை எதிர்கொள்கிறது.

Update: 2018-07-06 21:30 GMT
சமாரா, 

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சமாரா நகரில் அரங்கேறும் 3-வது கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, சுவீடனை எதிர்கொள்கிறது.

கணிக்க முடியாத அணிகளில் ஒன்றான சுவீடன் 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு 1-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி அளித்தது. கேப்டன் ஆன்ட்ரியாஸ் கிரான்விஸ்ட், மார்கஸ் பெர்க், டோய்வோனென், எமில் போர்ஸ்பெர்க் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். தாக்குதல் மற்றும் தடுப்பாட்டத்தில் கைதேர்ந்தவர்களான சுவீடன் அணியினர், 1994-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக அரைஇறுதியை எட்டும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளனர்.

அதே சமயம் இளம் வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறது. ‘இது போன்ற ஒரு அரிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போகலாம். ஆதலால் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் அறிவுரை வழங்கியுள்ளார். 6 கோல்களுடன் தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ள கேப்டன் ஹாரிகேனை அந்த அணி நிர்வாகம் அதிகமாக நம்பி இருக்கிறது. இங்கிலாந்து அணி 1990-ம் ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையில் அரைஇறுதிக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் ஒரே மாதிரியான பலத்துடன் மல்லுகட்டுவதால் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான விருந்து காத்திருக்கிறது.

மேலும் செய்திகள்