கால்பந்து
உலக கோப்பை கால்பந்து போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ரஷ்யாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குரோஷிய அணி

உலக கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி காலிறுதி போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது குரோஷிய அணி
மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி காலிறுதி போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் தரவரிசையில் பின்தங்கிய அணியான (70-வது இடம்) ரஷ்ய அணி, பலம் வாய்ந்த குரோஷியா அணியை எதிர்கொண்டது. 

உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கிய ரஷ்ய அணி போட்டி தொடங்கிய 31-வது நிமிடத்தில் கோல் அடித்து ரஷ்ய ரசிகர்களின் கரகோஷத்தில் திளைத்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் டெனிஸ் செரிஷிவ் துரிதமாக செயல்பட்டு தன் அணிக்கான கோல் கணக்கை துவக்கினார். இதனிடையே அடுத்த சில நிமிடங்களிலேயே குரோஷிய அணி வீரர் ஆந்த்ரேஜ் க்ரமாரிக் பதிலுக்கு கோல் அடிக்க ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. 

இந்நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல்கணக்கில் சமநிலையில் நீடித்தன. இரண்டாம் பாதி தொடங்கியதிலிருந்தே இரு அணி வீரர்களும் மைதானத்தில் மல்லுக்கட்டி கொண்டு நிற்க, யார் வெல்வார்கள்? என்ற கேள்வி ரசிகர்களிடையே மேலோங்கி காணப்பட்டது. இரு அணியும் சிறப்பாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தொடர்ந்து கோல்கணக்கில் சமநிலையே நீடிக்க, ஆட்டத்தின் 100-வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் டோமாகோஜ் விடா கோல் அடித்து அசத்தினார். 

இதனிடையே தங்கள் அணிக்கு வெற்றி நிச்சயம் என கொண்டாட்டத்தில் இருந்த குரோஷிய ரசிகர்களுக்கு வேட்டு வைக்கும் விதமாக, 115-வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் மரிஓ ஃபிகுஏரா கோல் அடித்து ரஷ்ய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் பரபரப்பின் உச்சத்திற்கே சென்ற ஆட்டத்தின் கூடுதல் நேரமும் முடிய இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகுத்தன. இதன் பின்னர் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இம்முறைப்படி குரோஷிய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தியதால் அரையிறுதிக்கு முன்னேறி சென்றது. கடந்த 1998-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக குரோஷிய அணி அரையிறுதிக்கு அடியெடுத்து வைப்பது குறிப்பிடத்தக்கது.