கால்பந்து
ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ராஜினாமா

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக ஜூலென் லோப்டெகு இருந்தார்.
மாட்ரிட், உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக ஜூலென் லோப்டெகு இருந்தார். ரியல் மாட்ரிட் கிளப்பின் பயிற்சியாளர் பொறுப்புக்கு அவர் பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் அவரை அதிரடியாக நீக்கியது. உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் இந்த சலசலப்பு அரங்கேறியது. உடனடியாக ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டின் முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ நியமிக்கப்பட்டார்.உலக கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2–வது சுற்றில் ரஷியாவிடம் பெனால்டி ஷூட்–அவுட்டில் வீழ்ந்து மூட்டையை கட்டியது. இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக பயிற்சியாளர் பதவியில் இருந்து 50 வயதான பெர்னாண்டோ ஹியரோ நேற்று விலகினார். ஏற்கனவே கவனித்து வந்த ஸ்போர்ட்டிங் இயக்குனர் பதவிக்கு திரும்பமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் ஸ்பெயின் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.