இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் அரைஇறுதியில் இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Update: 2018-07-09 23:30 GMT
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இதில் முதலாவது அரைஇறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி, 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ் அணி 3-வது முறையாக உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணி 2006-ம் ஆண்டில் 2-வது இடம் பெற்று இருந்தது. பெல்ஜியம் அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் தாகத்துடன் உள்ளது. 1986-ம் ஆண்டு உலக கோப்பையில் 4-வது இடம் பெற்றதே அந்த அணியின் சிறந்த நிலையாக உள்ளது.

பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் அரைஇறுதிக்குள் தடம் பதித்து இருக்கின்றன. பிரான்ஸ் அணி லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (2-1), பெரு (1-0) அணிகளை வென்றது. டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோல் எதுவுமின்றி டிரா கண்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவை (4-3) வெளி யேற்றியது. கால் இறுதியில் 2 முறை சாம்பியனான உருகுவே (2-0) அணியை வீழ்த்தியது.

பெல்ஜியம் அணி லீக் ஆட்டங்களில் பனாமா (3-0), துனிசியா (5-2), இங்கிலாந்து (1-0) அணிகளை தோற்கடித்தது. 2-வது சுற்று ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீட்டுக்கு அனுப்பியது. கால்இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான பிரேசிலை சாய்த்தது. பெல்ஜியம் அணி தனது முதல் 5 ஆட்டங்களில் 14 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறது.

பெல்ஜியம் அணியில் ரோம்லு லுகாகு (4 கோல்), கேப்டன் எடன் ஹசார்ட் (2 கோல்), கெவின் டி புருனே, நாசெர் சாட்லி, மரோன் பெல்லாய்னி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். அந்த அணியின் கோல் கீப்பர் கோர்ட்டோஸ் தடுப்பு அரணாக செயல்படுவதில் வல்லவர். அவரது சிறப்பான செயல்பாடு தான் கால்இறுதியில் வலுவான பிரேசில் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தது.

பிரான்ஸ் அணியில் கைலியன் பாப்பே (3 கோல்), அன்டோன் கிரிஸ்மான் (3 கோல்), பால் போக்பா, ஆலிவர் ஜீருட் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கிறார்கள். இரு அணிகளின் தாக்குதல் ஆட்டமும், தடுப்பு ஆட்டமும் சிறப்பாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க போவது யார்? என்பதை கணிப்பது எளிதான காரியம் அல்ல. எந்த அணி முதலில் கோல் அடிக்கிறதோ? அந்த அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 2 ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணி தான் வென்றுள்ளது. அதாவது பிரான்ஸ் அணி 1938-ம் ஆண்டில் முதல் சுற்று ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கிலும், 1986-ம் ஆண்டில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்று இருந்தது. தற்போது 3-வது முறையாக உலக கோப்பையில் சந்திக்கின்றன. இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் நிச்சயம் கால்பந்து ரசிகர்களுக்கு அருமையான விருந்தாக இருக் கும் என்பதில் அய்யமில்லை.

இன்றைய போட்டி குறித்து பிரான்ஸ் அணியின் தடுப்பு ஆட்டக்காரர் ரபெல் வரானே கருத்து தெரிவிக்கையில், ‘பெல்ஜியம் அணி இளம் வீரர்களை அதிகம் கொண்டது. இருப்பினும் அவர்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்த ஆட்டம் கடினமானது என்பது எங்களுக்கு தெரியும். தரமான வீரரான ரோம்லு லுகாகு உடல் ரீதியாக எந்தவொரு அணியின் தடுப்பு ஆட்டத்துக்கும் பிரச்சினை அளிப்பார். அவரது இந்த முயற்சிக்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். எடன் ஹசார்ட் பந்தை நன்றாக கடத்தி செல்லக்கூடியவர். அவருக்கு நாங்கள் இடம் அளிக்காத வகையில் விளையாடுவோம். அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட முயற்சிப்போம்’ என்றார்.

பெல்ஜியம் அணியின் நடுகள வீரர் கெவின் டி புருனே அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டியில் அரைஇறுதி ஆட்டத்துக்குள் வந்த பிறகு ஒருபோதும் சாதாரண எதிரணியை எதிர்பார்க்க முடியாது. பிரான்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் கடுமையாக மல்லுக்கட்டுவோம். அந்த அணிக்கு எதிராக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். முடிவில் களத்தில் யார் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார்களோ? அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். அது தான் கால்பந்து ஆட்டம்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்