கால்பந்து
“பாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம்” - குரோஷியா பயிற்சியாளர் சவால்

பாப்பே, கிரிஸ்மானை கட்டுப்படுத்துவோம் என குரோஷியா பயிற்சியாளர் சவால் விடுத்துள்ளார்.
ரஷியா,

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்-குரோஷியா அணிகள் நாளை (இரவு 8.30 மணி) மாஸ்கோவில் மோத உள்ளன. தொடர்ந்து 4-வது முறையாக ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஒரு அணி மகுடம் சூடப்போகிறது.

பிரான்சை எதிர்கொள்வது குறித்து குரோஷிய அணி பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் கூறும் போது, ‘குரோஷிய அணியால் இதை விட இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். பிரான்ஸ் அபாயகரமான ஒரு அணி. ஆனால் லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), எரிக்சன் (டென்மார்க்), ஹாரி கேன் (இங்கிலாந்து) ஆகியோரை எங்களால் கட்டுப்படுத்த முடிகிறது என்றால், அதே வழியில் பிரான்சின் முன்னணி வீரர்கள் கைலியன் பாப்பே, கிரிஸ்மான் (தலா 3 கோல் அடித்துள்ளனர்) ஆகியோரின் ஆதிக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியும். அவர்களை கண்டு எங்களுக்கு பயமில்லை’ என்றார்.

இதற்கிடையே, இறுதிப் போட்டிக்கான நடுவராக அர்ஜென்டினாவின் 43 வயதான நெஸ்டர் பிட்டானா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே இந்த உலக கோப்பையில் 4 ஆட்டங்களில் நடுவராக செயல்பட்டு உள்ளார்.