கால்பந்து
இங்கிலாந்தை பதம் பார்த்து 3-வது இடத்தை பிடித்தது பெல்ஜியம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை சாய்த்து 3-வது இடத்தை பிடித்தது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

உலக கோப்பை கால்பந்து தொடரில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முந்தைய ஆட்டத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த தாமஸ் முனீர் பெல்ஜியம் அணிக்கு திரும்பினார். இங்கிலாந்து 5 மாற்றங்களுடன் களம் இறங்கியது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் வீரர் தாமஸ் முனீர், சக வீரர் நாசெர் சாட்லி தட்டிக்கொடுத்த பந்தை கோலாக்கி அமர்க்களப்படுத்தினார். இந்த உலக கோப்பையில் பெல்ஜியம் தரப்பில் கோல் அடித்த 10-வது வீரர் முனீர் ஆவார். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக வீரர்கள் கோல்கள் போட்ட அணியான பிரான்ஸ் (1982-ம் ஆண்டு), இத்தாலி (2006-ம் ஆண்டு) ஆகிய அணிகளின் சாதனையை பெல்ஜியம் சமன் செய்தது.

இங்கிலாந்து வீரர்கள் பதிலடி கொடுக்க கடுமையாக முயன்றனர். பந்து இவர்கள் வசமே சற்று அதிகமாக (57 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. நிறைய ஷாட்டுகளும் (15 ஷாட்) அடித்தனர். ஆனால் பலம் வாய்ந்த பெல்ஜியத்தின் தடுப்பு வளையத்திற்குள் வெற்றிகரமாக ஊடுருவ முடியவில்லை. அதே சமயம் 82-வது நிமிடத்தில் பெல்ஜியம் கேப்டன் எடன் ஹசார்ட் ஒரு கோல் போட்டார்.

முடிவில் ‘ரெட் டெவில்ஸ்’ என்று அழைக்கப்படும் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை பதம் பார்த்து 3-வது இடத்தை பிடித்ததோடு, அதற்குரிய வெண்கலப்பதக்கத்தையும் சொந்தமாக்கியது. உலக கோப்பை போட்டி வரலாற்றில் பெல்ஜியத்தின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 1986-ம் ஆண்டு 4-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். அந்த அணிக்கு ரூ.161 கோடி பரிசாக கிடைத்தது.

ஏற்கனவே லீக் சுற்றிலும் பெல்ஜியத்திடம் தோற்று இருந்த இங்கிலாந்து அணி மீண்டும் சறுக்கலை சந்தித்து 4-வது இடத்தையே பெற முடிந்தது. அதற்குரிய பரிசுத்தொகையாக இங்கிலாந்து அணிக்கு ரூ.148 கோடி வழங்கப்பட்டது.