2022ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி: கத்தாரிடம் ஒப்படைத்த ரஷ்யா

2022ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தும் பொறுப்பு கத்தாரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. #Qatar

Update: 2018-07-16 06:59 GMT
மாஸ்கோ,

2022-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பையை நடத்தும் பொறுப்பை நேற்று நடந்த எளிமையான நிகழ்ச்சியில் ரஷ்யா, வளைகுடா நாடான கத்தாரிடம் ஒப்படைத்தது.

21-வது பிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நேற்றுடன் நடந்து முடிந்துள்ளன. கடந்த ஒரு மாதமாக நடந்த உலகக் கோப்பை திருவிழாவில், நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி சாதனை படைத்தது.

போட்டி துவங்குவதற்கு முன்பாக, 2022ம் ஆண்டு நடக்கும் அடுத்த உலகக் கோப்பை போட்டியை நடத்தும் பொறுப்பை கத்தாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கத்தாரின் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானி, பிபா தலைவர் கியானி இன்பான்டினே ஆகியோர் பங்கேற்றனர். இதில் ரஷிய அதிபர் புதின், கத்தாரின் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானியிடம் கால்பந்து ஒன்றை வழங்கி பொறுப்பை ஒப்படைத்தார்.

போட்டியை நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளை கத்தார் அணி இனி மேற்கொள்ள உள்ளது. 2022ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பரில் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன்மூலம் 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக் கோப்பை தொடரை கத்தார் நடத்த உள்ளது. அதன் பின்னர் உலகக் கோப்பை தொடரில் அணிகளின் பங்கேற்பு 48 ஆக உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்