கால்பந்து
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சம்பளம் முழுவதும் நன்கொடை - கால்பந்து நாயகன் எம்பாப்பே அதிரடி

கால்பந்து அதிரடி நாயகனான எம்பாப்பே தனது சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்கி அனைவரையும் கவர்ந்துள்ளார். #KylianMbappe
பாரிஸ்,

19 வயதான பிரான்ஸ் நாட்டு அதிரடி நாயகன் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை சம்பளம் முழுவதையும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ஐரோப்பிய அணிகளான பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதில் பிரான்ஸ் அணி குரோஷியா அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது.

இந்த உலகக் கோப்பை போட்டியில், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 கோல்களையும் அடித்ததன் மூலம்  சிறந்த இளம் வீரராக பிரான்ஸின் கிலியன் எம்பாப்பே தேர்வுசெய்யப்பட்டார்.

தற்போது, பி.எஸ்.ஜி அணிக்காக விளையாடிவரும் எம்பாப்பே, உலகக்கோப்பைத் தொடரில் விளையாடியதன் மூலம் தனக்குக் கிடைத்த சம்பளம் மற்றும் போனஸ் தொகை ரூ. 3.50 கோடியை விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுவரும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நலனுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் விளையாட 17 ஆயிரம் பவுண்டுகள் சம்பளமாகக்  கிடைக்கும். அதன்படி, 7 ஆட்டங்கள்  மூலம் எம்பாப்பேவுக்கு சம்பளம் மற்றும் போனஸாக 2,65,000 பவுண்டுகள் கிடைத்தது.  மேலும் தொடர்ந்து பி.எஸ்.ஜி அணியில் விளையாடப்போவதாக எம்பாப்பே கூறியுள்ளார்.

தற்போது, உலகிலேயே அதிக மதிப்புள்ள கால்பந்து வீரர்களில் நெய்மருக்கு அடுத்தபடியாக கிலியன் எம்பாப்பே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.