கால்பந்து
‘யுவென்டஸ் கிளப்பிலும் அசத்துவேன்’ ரொனால்டோ நம்பிக்கை

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் கிளப்புக்காக 9 ஆண்டுகள் விளையாடி 451 கோல்கள் அடித்திருந்தார்.
மிலன், போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் கிளப்புக்காக 9 ஆண்டுகள் விளையாடி 451 கோல்கள் அடித்திருந்தார். சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 4 முறையும், லா லிகா கோப்பையை 2 முறையும் அவரது காலத்தில் மாட்ரிட் அணி வென்று சாதனை படைத்தது. சமீபத்தில் அந்த கிளப்பில் இருந்து விலகிய ரொனால்டோ இத்தாலியின் யுவென்டஸ் கிளப்பில் விளையாட 4 ஆண்டு காலத்திற்கு ரூ.800 கோடிக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். புதிய அணிக்காக வருகிற 30–ந்தேதி பயிற்சியை தொடங்க காத்திருக்கும் 33 வயதான ரொனால்டோ கூறியதாவது:–ரியல்மாட்ரிட் கிளப்பை விட்டு விலகியதில் வருத்தம் ஏதும் இல்லை. ஒரே அணியில் எல்லாமே சவுகரியமாக அமைவதை (கோல் அடிப்பது மற்றும் வெற்றி பெறுவது) நான் விரும்பவில்லை. நான் இன்னும் இளம் வீரர் தான். விளையாட்டு களத்தில் கடுமையான சவால்களை விரும்புகிறேன்.பொதுவாக இந்த வயதில் போட்டி கடுமையாக இல்லாத சீனா அல்லது கத்தார் கிளப்புகளுக்குத்தான் நிறைய வீரர்கள் மாறுவார்கள். ஆனால் எனக்கு பெரிய கிளப்பில் விளையாட வாய்ப்பு கிடைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக யுவென்டஸ் கிளப் நிர்வாகத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். இதே போல் என்னுடைய வயதில் உள்ள வீரர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக நினைப்பார்கள். அவர்களில் இருந்து நான் வித்தியாசமானவன். புதிய சவால்களை எதிர்கொண்டு, இந்த கிளப்பிலும் எனது முத்திரையை பதிப்பதில் ஆவலுடன் உள்ளேன். சாம்பியன்ஸ் லீக்கில் யுவென்டஸ் கிளப் பட்டம் வெல்ல உதவ முடியும் என்று நம்புகிறேன்.இவ்வாறு ரொனால்டோ கூறினார்.