கால்பந்து
இங்கிலாந்து கால்பந்து தலைமை பயிற்சியாளர் காரேத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு

இங்கிலாந்து கால்பந்து தலைமை பயிற்சியாளரான காரேத் சவுத்கேட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #GarethSouthgate
இங்கிலாந்து,

உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷியாவில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி அரையிறுதி வரை முன்னேறி தோல்வியடைந்தது.

கடந்த 1966ம் ஆண்டிற்கு பிறகு, இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு செல்லும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்தனர். ஆனால், உலக கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில், குரோஷியா அணியிடம் இங்கிலாந்து தோல்வியுற்றது.

இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகள் தொடங்கும் முன், இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடும் என அனைவரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அரையிறுதி வரை முன்னேறியது. இங்கிலாந்து அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு பயிற்சியாளர் காரேத் சவுத்கேட் முக்கிய காரணம் என ரசிகர்கள் நம்புகின்றனர். பிபா உலக கோப்பையில் இருந்து இங்கிலாந்து வெளியேறினாலும், மக்கள் மனதில் காரேத் சவுத்கேட் நீங்கா இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம், அதன் தலைமைப் பயிற்சியாளர் காரேத் சவுத்கேட்டை 2020ம் ஆண்டுக்கு மேலாக பதவியில் தொடரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இங்கிலாந்தின் இளம் அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிக்கு சவுத்கேட் பயிற்சியின் கீழ் முன்னேறியதால், அவரது தலைமையில் பயிற்சி தொடர வேண்டும் என சம்மேளன தலைமை செயல் அலுவலர் மார்ட்டின் கிளேன் வலியுறுத்தியுள்ளார்.