ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி செப்டம்பர் 29-ந் தேதி தொடக்கம்

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி செப்டம்பர் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-08-25 22:30 GMT
கொல்கத்தா,

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த சீசனுக்கான (2018-19) ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. கொல்கத்தாவில் செப்டம்பர் 29-ந் தேதி போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., 2 முறை சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா, புனே சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், டெல்லி டைனமோஸ் உள்பட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும் லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

செப்டம்பர் 29-ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் (செப்டம்பர் 30-ந் தேதி) பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

சென்னையின் எப்.சி. அணியின் முதலாவது உள்ளூர் லீக் ஆட்டம் அக்டோபர் 6-ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவாவை சந்திக்கிறது. போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

டிசம்பர் 16-ந் தேதி வரை மட்டுமே போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பிபா போட்டிக்காக அக்டோபர் 8-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும், நவம்பர் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும், ஆசிய போட்டிக்கு இந்திய அணி தயாராகுவதற்கு வழிவிடும் வகையில் டிசம்பர் 17-ந் தேதி முதலும் போட்டி அட்டவணையில் இடைவெளி விடப்பட்டுள்ளது. 2-வது கட்ட அட்டவணை டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்