கால்பந்து
துளிகள்

இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

* உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்ஜில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அபூர்வி சண்டீலா 4-வது இடம் பெற்றார். இருவரும் குவித்த புள்ளிகள் மூலம் அடுத்த (2020) ஒலிம்பிக் போட்டிக்கான தகுதியை உறுதி செய்தனர்.

* ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஆக்கி அணியில் இடம் பிடித்து இருந்த ஒடிசாவை சேர்ந்த வீரர்களான பிரேந்திர லக்ரா, அமித் ரோஹிதாஸ் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று அறிவித்தார்.

* இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கும் விழா லண்டனில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதில் விருதுக்கு தேர்வாகும் வீரரின் பெயர் கடைசி நேரத்தில் அறிவிக்கப்படும். சிறந்த வீரருக்கான முதல் கட்ட பட்டியலில் 10 பேர் இடம் பிடித்து இருந்தனர். அதில் இருந்து 3 பேர் கொண்ட இறுதி பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த வீரர் விருதுக்கான இறுதி பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லூகா மோட்ரிச் (குரோஷியா), முகமது சலா (எகிப்து) ஆகிய 3 பேர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். மெஸ்சி (அர்ஜென்டினா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பட்டியலில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

* தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் கரீபியன் லீக் போட்டியில் பார்படோஸ் டிரைடென்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த நிலையில் அடிவயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் நாடு திரும்பி இருக்கிறார். எஞ்சிய போட்டி தொடரில் அவர் ஆடுவது கடினம் என்று தெரிகிறது.