இந்திய அணியின் மனநிலையை மாற்ற வேண்டும்: தலைமை ஆக்கி பயிற்சியாளர்

இந்திய அணியின் மனநிலையை மாற்ற வேண்டும் என இந்தியாவின் தலைமை ஆக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறினார். #HockeyIndia

Update: 2018-05-23 08:39 GMT
சென்னை,

இந்திய மகளிர் ஆக்கி அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஹரேந்திர சிங், ஆடவர் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக 3 வாரங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.  காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் மதிப்பாய்வு குழு கூட்டத்துக்கு பின்னர் இந்த முடிவை ஆக்கி இந்தியா அமைப்பு எடுத்தது

ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய ஆடவர் ஆக்கி அணியால் 5-வது இடமே பிடிக்க முடிந்தது. இதன் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டியில் பதக்கமே இல்லாமல் இந்திய ஆக்கி வெறும் கையுடன் திரும்பியது. இந்நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சோஜெர்ட் மரிஜென் மாற்றப்பட்டார்.

முன்னதாக, ஹரேந்திர சிங் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை ஆடவர் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும் ஜூனியர் அணிக்கும் பயிற்சி அளித்துள்ளார். இவர் பயிற்சியாளராக இருந்த போதுதான் ஜூனியர் உலகக் கோப்பையை (2016-ம் ஆண்டு) இந்திய அணி வென்றிருந்தது. மேலும் காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் ஆக்கி அணி 4-வது இடத்தை பிடித்ததிலும் ஹரேந்திர சிங் முக்கிய பங்குவகித்தார். அந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி, ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. மேலும் கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய போதும் ஹரேந்திர சிங்கே பயிற்சியாளராக இருந்தார்.

இந்நிலையில் பயிற்சியின் போது ஹரேந்திர சிங் தெரிவிக்கையில், ‘பயிற்சி தத்துவம் மாறாததால் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. அது பெண்கள் அணியாக இருந்தாலும் அல்லது ஜூனியர் அணியாக இருந்தாலும் அதே முறைதான். ஆனால் தேவைகள் அணியில் இருந்து வேறுபடலாம். அணியின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை பொருத்து சிறந்த முடிவுகளை பெற ஒரு நல்ல பயிற்சியாளர் தனது திட்டத்தினை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். என் பாணி பயிற்சியின் மூலம் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்த இந்திய அணி விரும்புகிறது. நான் அதை மாற்ற விரும்பவில்லை. எதிராளி யார் என்பது முக்கியமில்லை. நீங்கள் ஒரு பெரிய வெற்றி பெற விரும்பினால் அந்த முயற்சியில் தீவிரமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

மேலும் இந்திய ஆக்கிக்கு இது மிக முக்கியமான ஒரு ஆண்டு என்றும், வீரர்களின் மனநிலையை மாற்றியமைப்பது பயிற்சியாளரான தனது முக்கிய சவாலாக இருக்கும் என ஹரேந்திர சிங் கூறினார்.  

மேலும் செய்திகள்