ஹாக்கி
பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.
லண்டன்,

16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியனான உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அயர்லாந்து அணி ‘நாக்-அவுட்’ சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். இந்திய அணி வெற்றி கண்டால் தனது பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறும். கடந்த ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்றில் அயர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக ‘சி’ பிரிவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஸ்பெயின்-தென்ஆப்பிரிக்கா (மாலை 6.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

இன்றைய மோதல் குறித்து இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் அளித்த பேட்டியில் ‘இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அது எங்களுக்கு நல்ல தொடக்கமாகும். அந்த ஆட்டத்தின் மூலம் நாங்கள் பல சாதகமான விஷயங்களை பெற்று இருக்கிறோம். அது வரும் ஆட்டங்களில் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும் அந்த ஆட்டத்தின் வீடியோவை அணியினர் அனைவரும் பார்த்ததுடன், இன்னும் சிறப்பாக செயல்படுவது எப்படி? என்பது குறித்து ஆலோசித்தோம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இன்னும் நன்றாக செயல்பட்டு இருக்கலாம் என்பதே எங்கள் எண்ணமாகும்.

அமெரிக்கா-அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் வீடியோ பதிவையும் நாங்கள் பார்த்தோம். அந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி தொடக்கத்திலேயே முன்னிலை பெற்றதுடன் அதனை கடைசி வரை தக்க வைத்து கொண்டது. கடந்த 3 நாள் ஓய்வில் எங்களுக்குள் சில பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டோம். கோல் அடிப்பது குறித்து வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்தோம். சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றார்.