பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-அமெரிக்கா இன்று பலப்பரீட்சை

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில், இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

Update: 2018-07-28 23:00 GMT
லண்டன்,

16 அணிகள் பங்கேற்றுள்ள 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் இங்கிலாந்துடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. 2-வது ஆட்டத்தில் அயர்லாந்துடன் 0-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று, தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்தியாவுக்கு வாழ்வா-சாவா? மோதலாகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் கால்இறுதியை எட்டுவதற்கான பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். முந்தைய ஆட்டத்தில் நிறைய கோல் வாய்ப்புகளை வீணடித்த இந்திய அணி அதே தவறை மீண்டும் செய்யாது என்று இந்திய பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

முன்னதாக நேற்று ‘சி’ பிரிவில் நடந்த கடைசி கட்ட லீக் ஆட்டத்தில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. இதே பிரிவில் நடந்த அர்ஜென்டினா- தென்ஆப்பிரிக்கா இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. இந்த பிரிவில் ஜெர்மனி 9 புள்ளிகளுடன் கால்இறுதியை உறுதி செய்தது. அர்ஜென்டினா (4 புள்ளி), ஸ்பெயின் (3 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டின. தென்ஆப்பிரிக்கா (2 புள்ளி) வெளியேறியது.

மேலும் செய்திகள்