பெண்கள் உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா–அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா–அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Update: 2018-08-01 21:45 GMT

லண்டன்,

பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா–அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பெண்கள் உலக கோப்பை ஆக்கி

16 அணிகள் இடையிலான 14–வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் தங்கள் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2–வது மற்றும் 3–வது இடம் பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் உள்ள அணியுடன் ‘பிளே–ஆப்’ (நாக்–அவுட்) சுற்று ஆட்டத்தில் விளையாட வேண்டும். இதில் வெற்றி பெறும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த கால்இறுதிக்கு முந்தைய ‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 17–வது இடத்தில் உள்ள இத்தாலியை எதிர்கொண்டது.

இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9–வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. லால்ரெம்சியாமி இந்த கோலை அடித்தார். 45–வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நேகா கோயல் 2–வது கோலை திணித்தார். 55–வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா 3–வது கோலை போட்டார்.

பதில் கோல் திருப்ப இத்தாலி அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 3–0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்தது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது. 1978–ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்தியா–அயர்லாந்து இன்று மோதல்

இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக தரவரிசையில் 16–வது இடத்தில் உள்ள அயர்லாந்தை எதிர்கொள்கிறது. நல்ல பார்மில் இருக்கும் அயர்லாந்து அணி லீக் ஆட்டத்தில் 1–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்