ஹாக்கி
இந்திய பெண்கள் ஆக்கி அணியின் செயல்பாடு எப்படி? பயிற்சியாளர் கருத்து

பெண்கள் உலக கோப்பை ஆக்கியில் இந்திய அணி செயல்பாடு குறித்து, தலைமை பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். #womensHockeyWorldCup
லண்டன்,

16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டிகள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் இந்தியாவை வென்று அயர்லாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது. இதனால் 1974க்குப் பின் அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே கூறுகையில், ‘உலக கோப்பை தொடரில் பெரிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டோம். இத்தொடரில் மொத்தம் 3 கோல் மட்டுமே விட்டுக் கொடுத்தோம். ஆனால் எங்கள் தரப்பில் போதுமான அளவு கோல் அடிக்கவில்லை. இத்தொடரில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம்.

நீண்ட இடைவெளிக்குப் பின் உலக கோப்பை தொடரின் காலிறுதியில் பங்கேற்று இந்திய பெண்கள் சாதித்தனர். இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. நீங்கள் பெருமைப்படும் நாள் விரைவில் வரும் என்றேன். ஆனால் காலிறுதியில் தோற்றது மிகவும் வேதனையாக உள்ளது என்று அவர் கூறினார்.