ஹாக்கி
ஆண்கள் ஆக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டு மூலம் மேலும் இரு தங்கப்பதக்கம் கிட்டியது.
ஜகர்தா, ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு குத்துச்சண்டை மற்றும் சீட்டு விளையாட்டு மூலம் மேலும் இரு தங்கப்பதக்கம் கிட்டியது.குத்தச்சண்டையில் அமர்க்களம் ஆசிய விளையாட்டு போட்டியில் 14–வது நாளான நேற்று இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்ததாக அமைந்தது என்றே சொல்லலாம்.ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 49 கிலோ உடல் எடை பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அமித் பன்ஹால், ஒலிம்பிக் மற்றும் ஆசிய சாம்பியனான உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் டுஸ்மாட்டோவுடன் கோதாவில் இறங்கினார். அனுபவம் வாய்ந்த ஹசன்பாய்க்கு அமித் பன்ஹால் கடும் குடைச்சல் கொடுத்தார். முதல் இரு ரவுண்டுகளில் இருவரும் ஏறக்குறைய சமநிலையிலேயே இருந்தனர். கடைசி ரவுண்டில் அமித் பன்ஹால், ஒலிம்பிக் சாம்பியனுக்கு சில ஆக்ரோ‌ஷமான குத்துகளை விட்டு அசத்தினார். தற்காப்பு யுக்தியையும் எதிராளியை விட துல்லியமாக கடைபிடித்தார். முடிவில் நடுவர்களின் தீர்ப்புபடி அமித் பன்ஹால் 3–2 என்ற கணக்கில் ஹசன்பாயை பதம் பார்த்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.அரியானாவைச் சேர்ந்த 22 வயதான அமித் பன்ஹால் ராணுவத்தில் பணியாற்றுகிறார். நடப்பு ஆசிய விளையாட்டில் குத்துச்சண்டையில் மகுடம் சூடிய ஒரே இந்தியர் இவர் தான். ஒட்டுமொத்த ஆசிய விளையாட்டு வரலாற்றில் தங்கத்தை முகர்ந்த குத்துச்சண்டை வீரர்களின் பட்டியலில் 8–வது இந்தியராக அமித் பன்ஹால் இணைந்தார்.கனவு நனவானது ‘தங்கநாயகன்’ பன்ஹால் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஹம்பர்க்கில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியின் கால்இறுதியில் இதே ஹசன் பாயுடன் தான் தோல்வி அடைந்தேன். அதற்கு இப்போது பழிதீர்த்துக் கொண்டேன். இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பயிற்சி மேற்கொண்டது வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. எனது அறிமுக ஆசிய விளையாட்டிலேயே அதுவும் ஒலிம்பிக் சாம்பியனை வீழ்த்தி தங்கம் வென்றதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது.’ என்றார்.இந்திய குத்துச்சண்டையின் உயர்செயல்பாட்டு இயக்குனரும், ஆண்கள் அணியின் பயிற்சியாளருமான சான்டியாகோ நீவா கூறும் போது, ‘அமித் மற்றும் மற்ற குத்துச்சண்டை வீரர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட குத்துச்சண்டையில் 2–3 பதக்கங்கள் (ஒரு தங்கம், ஒரு வெண்கலம் மட்டுமே கிடைத்தது) குறைந்து விட்டது.’ என்றார்.சீட்டு ஆட்டத்தில் தங்கம் இந்த ஆசிய விளையாட்டில் ‘பிரிட்ஜ்’ எனப்படும் சீட்டு ஆட்டம் முதல் முறையாக அறிமுகம் ஆனது. இதில் 14 நாடுகளில் இருந்து 217 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் 24 இந்தியர்களும் அடங்குவர்.ஏற்கனவே ‘பிரிட்ஜ்’ விளையாட்டில் இந்தியா 2 வெண்கலம் பெற்றிருந்தது. நேற்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரனாப் பர்தன், ஷிப்நாத் சர்கார் ஜோடி 5 ரவுண்ட் முடிவில் மொத்தம் 384 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. சீனாவின் லிஸின் யாங்– காங் சென் ஆகியோர் 378 புள்ளிகளுடன் 2–வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றனர்.60 வயதான பிரனாப் பர்தன், கட்டுமான தொழில் செய்து வருகிறார். நடப்பு ஆசிய தொடரில் இந்திய அணியில் அதிக வயதில் பதக்கத்துக்கு முத்தமிட்டவர் இவர் தான். ‘பிரிட்ஜ் விளையாட்டு செஸ் போட்டியை விட சவால் மிக்கது. மிகவும் போட்டி நிறைந்த ஒரு உள்அரங்க விளையாட்டு இதுவாகும்’ என்று பிரனாப் பர்தன் குறிப்பிட்டார். ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றும் 56 வயதான ஷிப்நாத் சர்கார் கூறுகையில், ‘முந்தைய நாள் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. காலையில் பழங்கள் மட்டுமே சாப்பிட்டேன். அந்த அளவுக்கு ஒரே டென்‌ஷன். சீனா, சிங்கப்பூரை தோற்கடித்தது சிறந்த முடிவுக்கு வழிவகுத்தது’ என்றார்.ஸ்குவாஷில் வெள்ளி பெண்கள் அணிக்கான ஸ்குவாஷ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தீபிகா பலிக்கல் தலைமையிலான இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. இதில் முதலாவது ஒற்றையரில் இந்தியாவின் இளம் மங்கை சுனைனா குருவில்லா, ஹாங்காங்கின் ஸி லோக் ஹோவை எதிர்த்து களம் இறங்கினார். இதில் சுனைனா 8–11, 6–11, 12–10, 3–11 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.அடுத்து கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் புகுந்த மற்றொரு இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா 3–11, 9–11, 5–11 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங்கின் அன்னி சி விங்கிடம் வீழ்ந்தார். இதையடுத்து ஹாங்காங் 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது. இந்திய பெண்கள் அணி தொடர்ந்து 2–வது முறையாக வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திஅடைய வேண்டியதாகி விட்டது.ஆக்கியில் இந்தியாவுக்கு வெண்கலம் ஆண்கள் ஆக்கியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்தியா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி ஆறுதல் அடைந்தது. இந்திய அணியில் ஆகாஷ்தீப்சிங் (3–வது நிமிடம்) ஹர்மன்பிரீத் சிங் (50–வது நிமிடம்) கோல் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது அடிக் (52–வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார்.இதன் இறுதி ஆட்டத்தில் ஜப்பான்–மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வழக்கமான நேரத்தில் ஆட்டம் 6–6 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. இதைத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்–அவுட்டில் ஜப்பான் 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை சூடியது.ஜூடோ, டைவிங் மற்றும் படகுப்போட்டியில் (கனோ–கயாக்) இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.