துளிகள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரஜிந்தர்பால் டேராடூனில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

Update: 2018-05-10 20:45 GMT

* 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டியில் உதவி நடுவராக பணியாற்றும் கவுரவம் இந்தியாவை சேர்ந்த 38 வயதான முன்னாள் கால்பந்து வீராங்கனை உவெனா பெர்னாண்டஸ்சுக்கு கிடைத்து இருக்கிறது. உவெனா பெர்னாண்டஸ் ஏற்கனவே 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இறுதிஆட்டத்தில் உதவி நடுவராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரஜிந்தர்பால் டேராடூனில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 80 வயதான ரஜிந்தர்பால்க்கு மனைவியும், 2 மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளரான ரஜிந்தர்பால் 1964–ம் ஆண்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். டெல்லி, அரியானா, பஞ்சாப் அணிகளுக்காக முதல் தர போட்டியில் விளையாடி இருக்கும் ரஜிந்தர்பால் மொத்தம் 98 முதல் தர போட்டியில் ஆடி 337 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

* ஸ்பெயின் லீக் (லா லிகா) கால்பந்து போட்டியில் பார்சிலோனா–ரியல் மாட்ரிட் அணிகள் இடையிலான ஆட்டம் பார்சிலோனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பார்சிலோனா அணி வீரர் செர்ஜி ராபர்ட்டோ பந்தை உதைக்க முயற்சிக்கையில் ரியல் மாட்ரிட் பின்கள வீரர் மார்செலோவை முழங்கையால் இடித்து தள்ளினார். இதனை கவனித்த போட்டி நடுவர் செர்ஜி ராபர்ட்டோவுக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். இந்த சம்பவம் குறித்து ஸ்பெயின் கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் செர்ஜி ராபர்ட்டோவுக்கு 4 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக பார்சிலோனா கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான பத்ரிநாத், ஏற்கனவே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், முதல் தர போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 37 வயதான பத்ரிநாத் தற்போது ஐ.பி.எல். போட்டியில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் முதல் தர போட்டியில் இருந்தும் முழுக்கு போட பத்ரிநாத் திட்டமிட்டுள்ளார். இந்திய அணிக்காக 2 டெஸ்ட், 7 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் பத்ரிநாத் 145 முதல் தர போட்டியில் விளையாடி 10,245 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 32 சதமும், 45 அரைசதமும் அடங்கும்.

மேலும் செய்திகள்