புரோ கபடி லீக்: இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1 கோடிக்கு ஏலம் போனார்

புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வீரர் மோனு கோயத் அதிகபட்சமாக ரூ.1½ கோடிக்கு விலை போனார்.

Update: 2018-05-30 22:45 GMT
மும்பை,

2014-ம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டில் இருந்து இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. 6-வது புரோ கபடி லீக் போட்டி வருகிற அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் வீரர்களுக்கான ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு அணியும் 18 முதல் 25 வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம். ஏலத்துக்காக ஒவ்வொரு அணியும் தலா ரூ.4 கோடி வரை செலவிட முடியும். சில அணிகள் ஒரு சில வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துள்ளன. ஏலப்பட்டியலில் 422 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மும்பையில் நேற்று மாலை நடந்த வீரர்கள் ஏலம் கடும் விறுவிறுப்பாக அரங்கேறியது. எப்பொழுதும் இல்லாத வகையில் இந்த வருடத்தில் 6 வீரர்கள் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் விலைக்கு போய் ஆச்சரியப்படுத்தினார்கள். அதிகபட்சமாக கடந்த சீசனில் பாட்னா பைரட்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் மோனு கோயத் ரூ.1.51 கோடிக்கு ஏலம் போனார். அவரை அரியானா ஸ்டீலர்ஸ் அணி வாங்கியது. மற்றொரு இந்திய வீரர் ராகுல் சவுத்ரியை ரூ.1.29 கோடிக்கு தெலுங்கு டைட்டன்ஸ் அணி தக்கவைத்தது. இறுதி ஏலத்தொகையை கொடுக்க சம்மதித்து அவரை தன்வசப்படுத்தியது.

இன்னொரு இந்திய வீரரான தீபக் ஹூடாவை ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ரூ.1.15 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. நிதின் தோமரை புனேரி பால்டன் அணி ரூ.1.15 கோடிக்கு வாங்கியது. ரிஷாங் தேவாதிகாவை உ.பி.யோத்தா அணி ரூ.1.11 கோடிக்கு ஏலத்தில் தன்வசமாக்கியது. ஈரான் வீரர் பாசெல் அட்ராசாலியை ரூ.1 கோடிக்கு மும்பை அணி வாங்கியது.

தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், அமித் ஹூடா, சி. அருண் ஆகிய 3 வீரர்களை ஏற்கனவே தக்க வைத்துள்ளது. புரோ கபடி வீரர்கள் ஏலம் இன்றும் நடக்கிறது.

மேலும் செய்திகள்