துளிகள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

Update: 2018-06-11 22:00 GMT

* உலக டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பிரெஞ்ச் ஓபன் ஒற்றையர் பட்டத்தை 11-வது முறையாக கைப்பற்றி அசத்தினார். அவர் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் முதலிடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ரபெல் நடால் அளித்த ஒரு பேட்டியில், ‘உங்களை விட ஒருவரிடம் அதிக பணம் இருந்தாலோ? அல்லது உங்களை விட பெரிய வீடு வைத்து இருந்தாலோ? உங்களை விட அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருந்தாலோ? நீங்கள் ஒருபோதும் விரக்தி அடைய முடியாது. இதுபோன்ற நினைவுகளுடன் வாழ முடியாது. பெடரர் வென்று இருக்கும் பட்டத்தை கடக்க வேண்டும் என்பது எனது சிந்தனை கிடையாது. நான் விளையாட்டை அனுபவித்து விளையாடி வருகிறேன். எனது உடல் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து ஆடுவேன். வயதுக்கு எதிராக போராட முடியாது. நான் வருங்காலம் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. டென்னிஸ் எனது வாழ்க்கையில் முக்கியமான அங்கம் தான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் டென்னிஸ் தான் எனக்கு எல்லாம் என்று கிடையாது. நான் எல்லா இடங்களிலும் விளையாட விரும்புகிறேன். எனது உடல் நிலை குறித்து சில நாட்கள் சிந்தித்து தான் விம்பிள்டன் போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்வேன்’ என்று தெரிவித்தார்.

* ரஷியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில், ஆடுகளத்துக்கு வெளியே அடிக்கப்படும் பந்துகளை உள்ளே எடுத்து போடும் அதிகாரபூர்வ பணிக்கு இந்தியாவில் இருந்து 2 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்த 11 வயதான நாதனியா ஜான். மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்த 10 வயதான ரிஷி தேஜ் ஆவார். இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தேர்வில் இருந்து இந்த 2 பேரும் தேர்வாகி இருக்கிறார்கள். இருவரும் தலா ஒரு ஆட்டத்தில் பந்து எடுத்து போடும் பணிக்காக உலக கோப்பை கால்பந்து போட்டி களத்தில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்கள்.

* இத்தாலியை சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சாரா எர்ரானியிடம் கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு 2 மாதம் தடை விதித்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் இந்த தடையை அதிகரிக்க வேண்டும் என்று இத்தாலி ஊக்க மருந்து தடுப்பு கழகம் சார்பில், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் சாரா எர்ரானிக்கு விதிக்கப்பட்ட தடையை 2 மாதத்தில் இருந்து 10 மாதமாக அதிகரித்து நேற்று உத்தரவிட்டது.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டுபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் மீண்டும் இடம் பிடித்துள்ளார். காயம் காரணமாக அவர் கடந்த 6 மாதமாக அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்