பார்முலா1 கார்பந்தயம்: ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி

பார்முலா1 கார்பந்தயத்தின் 7-வது சுற்றான கனடா கிராண்ட்பிரி பந்தயத்தில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார்.

Update: 2018-06-11 22:15 GMT
மான்ட்ரியல்,

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 7-வது சுற்றான கனடா கிராண்ட்பிரி பந்தயம் மான்ட்ரியல் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 305.27 கிலோ மீட்டர் தூர பந்தய இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இந்த பந்தயத்தில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் (பெராரீ அணி) 1 மணி 28 நிமிடம் 31.377 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை கைப்பற்றினார். பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ்) 2-வது இடத்தை தனதாக்கி 18 புள்ளிகள் பெற்றார். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பென் (ரெட்புல்) 3-வது இடத்தை பிடித்து 15 புள்ளிகள் பெற்றார்.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ்) 5-வது இடமே பெற்றார். அவருக்கு 10 வெற்றி புள்ளிகள் கிட்டியது. ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சர்டோ (ரெட்புல்) 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகளை தன்வசப்படுத்தினார். போர்ஸ் இந்தியா அணி வீரர் ஸ்டீபன் ஓகான் 9-வது இடம் பிடித்தார்.

இந்த சீசனில் செபாஸ்டியன் வெட்டல் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் நடப்பு சாம்பியன் லீவிஸ் ஹாமில்டனை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார். 7-வது சுற்று பந்தயம் முடிவில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 121 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். பின்லாந்து வீரர் வால்ட்டெரி போட்டாஸ் 86 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேனியல் ரிச்சர்டோ 84 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

பார்முலா 1 கார் பந்தயத்தின் 8-வது சுற்று பந்தயமான பிரான்ஸ் கிராண்ட்பிரி போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்