பிற விளையாட்டு
துளிகள்

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
* மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில், தரவரிசையில் 3-வது இடம் இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் சு யிங்கை (சீன தைபே) சந்தித்தார். 55 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 15-21, 21-19, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்று வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 13-21, 13-21 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கென்டோ மொமோடாவிடம் வீழ்ந்தார்.

* இங்கிலாந்துக்கு எதிராக வருகிற 3-ந்தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். பும்ரா இடது கை பெருவிரலில் ஏற்பட்ட காயத்தாலும், வாஷிங்டன் சுந்தர் வலது கணுக்கால் காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

* இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இரண்டு புதிய பந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ கலை அழிந்து விட்டது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும். 2 புதிய பந்து பயன்படுத்துகையில் பந்து வீச்சாளர்கள் ரன் விட்டுக்கொடுப்பதை கட்டுப்படுத்துவது கடினமானதாகும். ஒரு பந்து மட்டும் பயன்படுத்தினால் அந்த பந்து தேய்மானம் அடையும் போது ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியும். 2 பந்து முறை வந்த பிறகு தற்போது ஒருநாள் போட்டியில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’கை பார்ப்பது மிகவும் அரிதாகி விட்டது’ என்றார்.