உலக பேட்மிண்டன் போட்டி இந்திய வீராங்கனை சாய்னா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2018-07-31 21:30 GMT
நான்ஜிங், 

உலக பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-வது சுற்றில் சாய்னா

24-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 72-ம் நிலை வீராங்கனை அலியே டெமிர்பாக்கை (துருக்கி) சந்தித்தார்.

38 நிமிடம் நடந்த இந்த மோதலில் சாய்னா 21-17, 21-8 என்ற நேர்செட்டில் டெமிர்பாக்கை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். சாய்னா அடுத்து தாய்லாந்து வீராங்கனை ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.

ஸ்ரீகாந்த் வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 21-16 என்ற நேர்செட்டில் 87-ம் நிலை வீரர் ஹட் நுயேனை (அயர்லாந்து) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 37 நிமிடம் தேவைப்பட்டது. 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த், ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத்தை எதிர்த்து விளையாட வேண்டிய தென்கொரியா வீரர் சன் வான் ஹோ காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியதால், சாய் பிரனீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2-வது சுற்றை எட்டினார்.

இந்திய ஜோடிகள்

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 12-21, 21-19 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் இணையை வீழ்த்தியது.

இதே போல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 19-21, 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சியாங் காய் சின்-ஹூங் ஷி ஹான் இணையை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை 21-9, 22-20 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மார்க் லாம்ஸ்புஸ்-இசபெல் ஹெர்ட்ரிச் ஜோடியை வெளியேற்றியது.

மேலும் செய்திகள்