பிற விளையாட்டு
துளிகள்

வாஷிங்டன் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதில் குஸ்னெட்சோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

* ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய தடகள அணியில் இடம் பிடித்துள்ள அசாமை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை டுடீ சந்த் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆசிய விளையாட்டு போட்டியில் நமது நாட்டுக்காக பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான் எனது முக்கிய நோக்கமாகும். நாட்டுக்காக தங்கப்பதக்கம் வெல்ல எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவேன். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சீனா, இலங்கை, கஜகஸ்தான் வீராங்கனைகள் கடும் சவால் அளிப்பார்கள். எந்த வகையான சவாலையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

*ஹாங்காங் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சமீபத்தில் நடந்தது. இதன் ஜூனியர் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்வாஸ்திகா கோஷ்-ஜிங்யி (சிங்கப்பூர்) இணை வெண்கலப்பதக்கம் வென்றது.

* வாஷிங்டன் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 87-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை ஸ்வெட்லானா குஸ்னெட்சோவா 4-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் செக்குடியரசின் டோனா வெகிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அவர் வென்ற 18-வது பட்டம் இதுவாகும்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி.அணி, இந்த சீசனுக்கு இத்தாலியை சேர்ந்த நடுகள வீரர் ஆந்த்ரே ஒர்லான்டியை ஒப்பந்தம் செய்துள்ளது. 34 வயதான ஆந்த்ரே ஒர்லான்டி இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் விளையாட ஆர்வமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அக்டோபர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள், 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அளித்த பேட்டியில், சீனியர் வீரர்களான ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இளம் வீரர்கள் கொண்ட அணியை டிம் பெய்ன் வழி நடத்த இருக்கிறார். சீனியர் வீரர்களான ஹேசில்வுட், கம்மின்ஸ் போன்றோர் டிம்பெய்னுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

* பர்மிங்காமில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதவாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இங்கிலாந்து அணியினர் உள்ளூரில் தங்களுக்கு பிடித்த இடத்துக்கு சென்று கொண்டாடினார்கள். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சக வீரர் ஸ்டூவர்ட் பிராட்டுடன் இணைந்து கோல்ப் விளையாடினார். அப்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் அடித்த பந்து அருகில் இருந்த மரத்தில் பட்டு அவரது முகத்தை நோக்கி திரும்பியது. அதனை ஜேம்ஸ் ஆண்டர்சன் தடுத்ததால் காயத்தில் இருந்து தப்பினார்.