பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்துகிறார், நீரஜ் சோப்ரா

ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில், இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் வாய்ப்பு இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டு திருவிழா இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் வருகிற 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் 36 வகையான போட்டிகளில் களம் இறங்க இருக்கிறார்கள். இவர்களை தவிர்த்து பயிற்சியாளர்களும், அதிகாரிகளும், உடல்தகுதி நிபுணர்களும் உடன் செல்வார்கள். இவர்களையும் சேர்த்தால் ஒட்டுமொத்த எண்ணிக்கை 800-ஐ தாண்டும்.

இதையொட்டி இந்திய குழுவுக்கு வழியனுப்பு விழா டெல்லியில் நேற்று நடந்தது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பாத்ரா, செயலாளர் ராஜீவ் மேத்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டு உத்வேகம் அளிக்கும் வகையில் வாழ்த்தி பேசினர்.

அப்போது, 18-ந்தேதி நடைபெறும் கோலாகலமான தொடக்க விழாவில் இந்திய அணிக்கு தேசிய கொடியை ஏந்தி தலைமை தாங்கும் கவுரவம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்படுவதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பாத்ரா அறிவித்தார்.

ஜூனியர் உலக தடகளத்தில் உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா, காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம் வென்று அசத்தினார். அரியானாவைச் சேர்ந்த 20 வயதான நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கம் வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

நீரஜ் சோப்ரா கூறுகையில், ‘ஆசிய விளையாட்டு தொடக்க விழாவில், தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்து செல்வதற்கு என்னை தேர்வு செய்தது உண்மையிலேயே திரிலிங்காக இருக்கிறது. முன்கூட்டியே இது பற்றிய தகவல் எதுவும் என்னிடம் சொல்லப்படவில்லை. இது போன்ற ‘மெகா’ போட்டிக்கு இந்திய அணிக்கு தலைமை தாங்குவது மிகப்பெரிய கவுரவமாகும். ஆசிய விளையாட்டில் ஈட்டி எறிதல் போட்டி ஆகஸ்டு 27-ந்தேதி தான் நடக்கிறது. ஆனால் இப்போது தொடக்க விழாவிற்காக முன்கூட்டியே செல்ல வேண்டி இருக்கிறது. இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மகிழ்ச்சி தான்’ என்றார்.

வீரர்களுக்கு ரதோர் அறிவுரை

நிகழ்ச்சியில் வீரர், வீராங்கனைகளுக்கு அறிவுரை வழங்கி மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் பேசுகையில் ‘இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டில் கலந்து கொள்வது உங்களுக்கு கிடைத்த உயரிய கவுரவமாகும். இந்த போட்டியில் பங்கேற்கும் போதும், விளையாட்டு கிராமத்தில் தங்கும் போதும், உங்களது தனிப்பட்ட அடையாளத்தை இழந்து இந்தியா என்ற ஒரே பெயரில் தான் கவனிக்கப்படுவீர்கள். அதனால் களத்திலும், வெளியிலும் சர்ச்சைகளுக்கு இடம் அளிக்காமல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். வீரர்களும், பயிற்சியாளர்களும், அதிகாரிகளும் இதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

கடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 11 தங்கம் உள்பட 57 பதக்கங்களை கைப்பற்றியது. இந்த முறை நிச்சயம் இந்தியா அதை விட அதிக பதக்கங்கள் வெல்லும் என்று நம்புவதாக ராஜ்யவர்தன் சிங் ரதோர் கூறினார். ‘இந்த போட்டிக்காக நீங்கள் ஆயிரக்கணக்கான மணி நேரம் பயிற்சி மேற்கொண்டு, கடினமாக உழைத்து இருக்கிறீர்கள். அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். முடிவுகளை பற்றி அதிகம் கவலைப்படாமல் உங்களது திறமை மீது மட்டும் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். அதற்கு பலன் கிட்டும்’ என்றும் ரதோர் குறிப்பிட்டார்.