ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் தீபக் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்

ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளி பதக்கம் வென்றார். #Asiangames #DeepakKumar

Update: 2018-08-20 05:04 GMT
ஜகர்தா,

45 நாடுகள் பங்கேற்கும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நேற்று முன்தினம் கோலாகலமுடன் தொடங்கியது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். நேற்றைய போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார். அதே போல் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியின் 2-ம் நாளான இன்று கபடி, ஹாக்கி, டென்னிஸ், பேட்மிண்டன், கைப்பந்து என பல போட்டிகளில் இந்தியா சரர்பாக வீரர்கள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர். இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது. இந்திய வீரர் தீபக் குமார் போட்டியில் பங்கேற்று திறம்பட செயல்பட்டு இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். இதனிடையே இறுதிச்சுற்றில் தீபக் குமார் 247.7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றார். 249.1 புள்ளிகள் பெற்ற சீன நாட்டை சேர்ந்த யாங் ஹரோன் முதலிடத்தை அடைந்து தங்கப்பதக்கத்தை பெற்றார். மேலும் இப்போட்டியில் இந்திய வீரர் ரவிகுமார் 205.2 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

மேலும் செய்திகள்