தொடர்ந்து 7 முறை தங்கம் வென்ற இந்திய ஆண்கள் கபடி அணி அரைஇறுதியில் அதிர்ச்சி தோல்வி ஈரானிடம் வீழ்ந்தது

ஆசிய விளையாட்டு கபடியில் பலம் வாய்ந்த இந்திய ஆண்கள் அணி அரைஇறுதியில் ஈரானிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

Update: 2018-08-23 22:16 GMT
ஜகர்தா, 

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு கட்டாயம் மகுடம் கிட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆண்கள் கபடி பிரிவில் மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது.

இதன் அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஈரானை நேற்று மாலை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இந்திய அணி முன்னிலை வகித்தாலும், அதன் பிறகு ஈரான் அணியினர் சரிவில் இருந்து மீண்டனர். இதையடுத்து முதல் பாதி ஆட்டம் 9-9 என்ற புள்ளி கணக்கில் சமநிலை அடைந்தது.

இதனால் 2-வது பாதியில் ‘நீயா-நானா’ என்று கடுமையாக மல்லுகட்டினர். போக போக ஈரான் வீரர்களின் ‘பிடி’ மேலோங்கியது. மடக்கி பிடிப்பதில் (சூப்பர் டேக்கிள்ஸ்) கன கச்சிதமாக செயல்பட்ட ஈரான் வீரர்கள் போனஸ் வகையில் நிறைய புள்ளிகளை திரட்டி நெருக்கடி கொடுத்தனர். அதாவது களத்தில் 3-க்கும் குறைவான வீரர்கள் இருக்கும் போது, அந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் எதிராளியை மடக்கினால் போனஸ் புள்ளியும் சேர்த்து வழங்கப்படும். இதில் தான் ஈரான் வீரர்கள் தந்திரமாக செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் 16-12 என்று ஈரான் முன்னிலை பெற, அதன் பிறகு இந்திய வீரர்கள் பதற்றத்தில் கோட்டை விட்டனர். இந்திய கேப்டன் அஜய் தாகூர் எதிராளிகளிடம் சிக்கி கண் அருகே காயமடைந்து ரத்தம் கொட்டியது. சாம்பியன்கள் போல் வெறி கொண்டு விளையாடிய ஈரான் வீரர்கள் இந்தியாவை ஆல்-அவுட் செய்து முழுமையாக அடக்கினர்.

முடிவில் ஈரான் 27-18 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. அத்துடன் கடந்த இரண்டு முறை இறுதி சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது. அதே சமயம் முதல்முறையாக இறுதிசுற்றை எட்ட தவறிய இந்திய அணி வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

ஆசிய விளையாட்டில் கபடி போட்டி 1990-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அது முதல் தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 7 தங்கப்பதக்கம் வென்று வீறுநடை போட்டு வந்த இந்தியாவின் ஆதிக்கம் இந்த ஆசிய விளையாட்டில் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக இந்திய அணி லீக்கில் தென்கொரியாவிடம் தோற்றது நினைவிருக்கலாம். மற்றொரு அரைஇறுதியில் தென்கொரியா 27-24 என்ற புள்ளி கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

ஆண்கள் குழுவினர் ஏமாற்றி நிலையில், பெண்கள் கபடியில் இந்திய அணி அசத்தியுள்ளது. இதன் அரைஇறுதியில் இந்தியா 27-14 என்ற புள்ளி கணக்கில் சீனதைபேயை சாய்த்தது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி தங்கப்பதக்கத்திற்கான இறுதி ஆட்டத்தில் ஈரானை இன்று (பிற்பகல் 1.30 மணி) எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்