பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு 3 வெண்கலப்பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் ஆட்டத்தில் நேற்று இந்தியா 3 வெண்கலப்பதக்கம் வென்றது.

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் ஸ்குவாஷ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல், நடப்பு சாம்பியனான நிகோல் டேவிட்டை (மலேசியா) எதிர்கொண்டார்.

இதில் சென்னையை சேர்ந்த 26 வயதான தீபிகா பலிக்கல் 7-11, 9-11, 6-11 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள நிகோல் டேவிட்டிடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதானது. ஆசிய விளையாட்டு போட்டியில் 4 முறை தங்கப்பதக்கம் வென்றுள்ள 35 வயதான நிகோல் டேவிட் 5-வது தடவையாக தங்கத்தை குறி வைத்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

மற்றொரு ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, மலேசியாவை சேர்ந்த 19 வயதான சிவசங்கரியை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த 31 வயதான ஜோஷ்னா சின்னப்பா 10-12, 6-11, 11-9, 7-11 என்ற செட் கணக்கில் சிவசங்கரியிடம் வீழ்ந்தார். அரைஇறுதியில் சறுக்கலை ஜோஷ்னா சின்னப்பா சந்தித்தாலும் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் மலேசியாவை சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நிகோல் டேவிட், சக நாட்டை சேர்ந்த சிவசங்கரியுடன் மோதுகிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல், ஹாங்காங் வீரர் ஷூன் மின்னுடன் மோதினார். இதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சவுரவ் கோஷல் முதல் 2 செட்களை 12-10, 13-11 என்ற கணக்கில் தனதாக்கி அசத்தினார்.

ஆனால் அதன் பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் சவுரவ் கோஷல் பின்னடைவை சந்தித்தார்.

அடுத்த 3 செட்களை ஷூன் மின் 11-6, 11-5, 11-6 என்ற கணக்கில் கைப்பற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். தோல்வி அடைந்த சவுரவ் கோஷல் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். ஸ்குவாஷ் போட்டியில் நேற்று இந்தியா 3 வெண்கலப்பதக்கம் வென்றது.