இந்திய வீராங்கனை சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை சாய்னா வெண்கலப்பதக்கம் பெற்றார்

ஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார்.

Update: 2018-08-27 23:00 GMT
ஜகர்தா,

18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் 9-வது நாளான நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூயிங்கை எதிர்கொண்டார்.

32 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 17-21, 14-21 என்ற நேர்செட்டில் தாய் ஜூயிங்கிடம் வீழ்ந்தார். தாய் ஜூயிங்கிடம் சாய்னா தொடர்ச்சியாக தோல்வியை சந்திப்பது இது 10-வது முறையாகும். இருப்பினும் சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சாய்னா பெற்றார்.

1982-ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சையத் மோடி வெண்கலப்பதக்கம் வென்றதே தனிநபர் பிரிவில் இந்தியா பெற்ற முதல் பதக்கமாகும். தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு பேட்மிண்டன் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து இருக்கிறது.

ஐதராபாத்தில் வசித்து வரும் 28 வயதான சாய்னா 2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கமும், உலக போட்டியில் 2015-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும், 2017-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், 2014-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கமும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2010, 2018-ம் ஆண்டுகளில் தங்கப்பதக்கமும் வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்வி குறித்து சாய்னா கருத்து தெரிவிக்கையில், ‘நான் இன்னும் வேகமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். தாய் ஜூயிங்கின் ஒவ்வொரு ஷாட்டும் வித்தியாசமாக இருந்தது. அவரது ஆட்டம் சிறப்பு தரம் வாய்ந்ததாகும். அத்துடன் அவரது ஆட்டத்தை கணிப்பது கடினமானதாக இருந்தது. அவரது ஆட்டம் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. நான் நன்றாக தான் விளையாடினேன்.ஆனால் அவர் என்னை விட அருமையாக ஆடினார். நிச்சயமாக நான் எனது கையின் வேகத்தையும், களத்தில் பந்தை எதிர்கொள்ள செல்லும் வேகத்தையும் அதிகப்படுத்த வேண்டும். இந்த போட்டிக்கு தயாராக எனக்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. உலக போட்டியில் ஆடிய குறுகிய காலத்தில் இந்த போட்டிக்கு வந்தேன். அவர் வீழ்த்த முடியாத வீரர் என்று நான் நினைக்கவில்லை. ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 2-ம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்தித்தார்.

பரபரப்பாக 65 நிமிடம் அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான சிந்து 21-17, 15-21, 21-10 என்ற செட் கணக்கில் அகானே யமாகுச்சியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை என்ற சிறப்பை சிந்து பெற்றார். இந்த போட்டியில் யமாகுச்சி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தார். உயரமான சிந்து தனது நேர்த்தியான அதிரடி ஷாட்கள் மூலம் அவருக்கு பதிலடி கொடுத்தார். 3-வது செட்டில் ஒரு கேமில் இருவரும் இடைவிடாமல் 50 ஷாட்கள் வரை சளைக்காமல் அடித்தது ரசிகர்களின் ஆர்வத்துக்கு நல்ல தீனி போடுவதாக அமைந்தது. இந்த போட்டி தொடரில் சிந்து 2-வது முறையாக யமாகுச்சியை வீழ்த்தியுள்ளார். அணிகள் பிரிவிலும் அவரை வென்று இருந்தார்.

இன்று நடைபெறும் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து, நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூயிங்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

மேலும் செய்திகள்