பிற விளையாட்டு
பாய்மரப்படகு போட்டியில் இந்தியாவுக்கு 3 பதக்கம்

ஆசிய விளையாட்டில் எதிர்பாராத ஜாக்பாட்டாக இந்தியாவுக்கு பாய்மரப்படகு போட்டியில் 3 பதக்கங்கள் கிடைத்தது.
ஜகர்தா, ஆசிய விளையாட்டில் எதிர்பாராத ஜாக்பாட்டாக இந்தியாவுக்கு பாய்மரப்படகு போட்டியில் 3 பதக்கங்கள் கிடைத்தது. பாய்மரப்படகு போட்டியில் முதலில் வருவோருக்கு ஒரு புள்ளி, அடுத்து வருவோருக்கு 2 புள்ளி, 3–வது இலக்கை கடப்போருக்கு 3 புள்ளி என்ற வகையில் புள்ளிகள் வழங்கப்படும். இலக்கை நிறைவு செய்யாமலோ அல்லது விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டாலோ பங்கேற்கும் படகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் புள்ளி கொடுக்கப்படும். ஆக ஒட்டுமொத்த பந்தயங்களின் முடிவில் குறைவான புள்ளிகள் பெறுபவரே சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.பெண்களுக்கான 49இ எப்.எஸ். வகை பிரிவில் இந்தியாவின் வர்ஷா கவுதம்– ஸ்வேதா ஷெர்விகர் ஜோடி 15 ரேஸ் முடிவில் மொத்தம் 44 புள்ளிகளுடன் 2–வது பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. இதில் 20 வயதான வர்ஷா கோவையைச் சேர்ந்தவர் ஆவார். ஸ்வேதா மும்பையில் பிறந்தவர். சிங்கப்பூரின் மின் கிம்பெர்லி– ருய் கி செசிலியா இணை எல்லா ரேசிலும் முன்னிலை பெற்று 15 புள்ளிளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது.ஆண்களுக்கான 49இஆர் பிரிவில் முதல் இரு இடங்களை ஜப்பான், வடகொரியா ஜோடிகள் பெற்றன. இந்தியாவின் கணபதி– வருண் தக்கார் ஜோடி 15 ரேஸ் நிறைவில் 53 புள்ளிகளுடன் 3–வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தியது. இருவர்கள் இருவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். கணபதி கூறுகையில், ‘14–வது ரேசில் நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டோம். இல்லாவிட்டால் நாங்கள் தங்கம் கூட வென்றிருக்க முடியும். எங்கள் மீது ஜப்பான் அணியினர் பொய்யான புகார் கொடுத்து விட்டனர்’ என்றார்.பெண்களுக்கான தனிநபர் ஓபன் லேசர் 4.7 பிரிவு 12 ரேஸ் கொண்டது. இதில் களம் இறங்கிய இந்தியாவின் ஹர்ஷிதா மொத்தம் 74 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார். முதல் இரு இடங்களை மலேசியாவின் முகமது பாஜி (25 புள்ளி), சீனாவின் ஜியான்ஸியாங் வாங் (66 புள்ளி) முதல் இரு இடங்களை பிடித்தனர். 16 வயதான மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஹர்ஷிதா ‘தேசத்திற்காக பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை’ என்று கூறி பரவசமடைந்தார். ஆசிய விளையாட்டில் பாய்மரப்படகு போட்டியில் 1982–ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.