பிற விளையாட்டு
‘சுடுகாட்டுக்குப் போங்கள்!' -வில்வித்தைப் பயிற்சியாளரின் விந்தைப் பயிற்சி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் உலக சாம்பியன் தென்கொரியாவுடன் தோளோடு தோள் மோதி, வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கின்றன, இந்திய வில்வித்தை அணிகள்.
உலக சாம்பியனுக்கே கடும் சவால் கொடுக்க வேண்டும் என்றால் எந்த அளவு இந்திய அணியினர் தயாராகியிருக்க வேண்டும்? அதனால்தான் அவர்களுக்கு பல வித்தியாசமான பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில் ஒன்று, இரவில் தனியே சுடுகாட்டுக்குச் செல்வது. வீரர், வீராங்கனைகளின் மன வலுவைக் கூட்டத்தான் இந்தப் பயிற்சி.

தனியே செல்லும் வில்வித்தையாளர், சுடுகாடு அல்லது இடுகாட்டில் குறிப்பிட்ட ஒரு பொருளைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வர வேண்டும் அல்லது ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளை எடுத்துவர வேண்டும்.

மனதிடத்தை அதிகரிக்க தாங்கள் அளிக்கும் பல பயிற்சிகளில் ஒன்றுதான் இது என்கிறார், இந்திய வில்வித்தை ‘ரிகர்வ்’ பயிற்சியாளர் சவாயன் மஜி. இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான பயிற்சிகள் மூலம், வீரர், வீராங்கனைகள் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்திக்கொள்ள உதவ முடியும் என்கிறார்.

ஆனாலும், ‘அதற்காக இரவில் சுடுகாட்டுக்குப் போகச் சொல்ல வேண்டுமா?’ என்று கேட்பவர்கள், உலக சாம்பியன் தென்கொரியாவுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளை அறிந்துகொள்ள வேண்டும்.

தென்கொரிய வில்வித்தை சங்கம் தனது வீரர்களை ஓர் இரவு முழுவதும் பிணவறையில் தங்கி அங்குள்ள சடலங்களை உற்றுப் பார்த்திருக்க உத்தரவிட்டிருக்கிறது. மாநகர சாக்கடையைச் சுத்தம் செய்வது, ரப்பர் மிதவைகளைச் சுமந்துகொண்டு மலையேறுவது போன்ற பயிற்சிகளையும் அளித்திருக்கிறது.

உலக அளவிலான போட்டிகளின் சவால், நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் வில்வித்தையாளர்களை மனரீதியாவும், உடல்ரீதியாகவும் வலுப் படுத்தத்தான் இதுபோன்ற பயிற்சிகள் என தென்கொரிய வில் வித்தைச் சங்கம் கூறுகிறது.

ஆனால் சில வீரர்கள் இதுபோன்ற பயிற்சிகளை ஏற்க மறுப்பதும் நடந்திருக்கிறது. ஒருமுறை, ஒலிம்பிக் வெற்றியாளர்களான தென்கொரிய வில்வித்தை வீரர்கள் நால்வர், இம்மாதிரியான பயிற்சிகள் மிகவும் தீவிரமாக இருப்பதாகக் கூறி அதிலிருந்து விலகிக் கொண்டனர். அவர்கள் ஐந்தாண்டு காலம் தேசிய முகாமில் பங்கேற்கக் கூடாது என்று தடைவிதித்துவிட்டது அந்நாட்டு வில்வித்தைச் சங்கம். தங்களின் இதுபோன்ற விந்தைப் பயிற்சிகள்தான் தமக்கு வெற்றிகளை அறுவடை செய்து தருவதாக அச்சங்கம் கூறுகிறது.

அது உண்மையோ என்னவோ, 22 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என்று ஒலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற முதல் நாடாக தென்கொரியா திகழ்கிறது. இத்தனைக்கும், 1984-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்தான் தென்கொரியா முதல்முறையாக வில்வித்தைப் போட்டியில் பங்கேற்றது.

சிட்னி ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக, தென்கொரிய வில்வித்தை வீரர், வீராங் கனைகள் திரளான பார்வையாளர்கள் முன்னால் பயிற்சி செய்ய வைக்கப்பட்டனர். அவர்கள் சிறப்பாகச் செயல்படும்போது பாராட்டி ஒலி எழுப்பும் அதேநேரம், அவர்கள் சொதப்பும்போது பார்வையாளர்கள் கிண்டல் ஒலி எழுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டது.

அவற்றை எல்லாம் ஒப்பிடும்போது, இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி கொஞ்சம் ‘கம்மி’தான்.

‘‘நாங்கள் வீரர், வீராங்கனைகளை சுடுகாட்டுக்குத் தனியே செல்லக் கூறுவதைப் போல, 10 மீட்டர் உயரத்தில் இருந்து குதிக்கும் பயிற்சியும் அளிக்கிறோம். ஆனால் அதுவரையிலான உயரம் படிப்படியாகத்தான் அதிகரிக்கப்படும்’’ என்கிறார், இந்தியப் பயிற்சியாளர் சவாயன்.

நமது வில்வித்தையாளர்களுக்கு, ராணுவ கமாண்டோ வீரர்களுக்கான சில பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றனவாம்.

உலக விளையாட்டு அரங்கில் சாதிக்க, எப்படியெல்லாம் சிரமப்பட வேண்டியிருக்கிறது!