பிற விளையாட்டு
தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை ‘நமது சாம்பியன்’ என்று மத்திய மந்திரி பாராட்டு

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரர் லட்சுமணனுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை ‘நமது சாம்பியன்’ என்று மத்திய மந்திரி பாராட்டு
புதுடெல்லி,

இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம் உள்பட 69 பதக்கங்களை குவித்து சாதனை படைத்தது. டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த பாராட்டு விழாவில், தனிநபர் பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20, ரூ.10 லட்சம் வீதம் மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ஆசிய விளையாட்டில் சிறிய தவறினால் பதக்கத்தை இழந்த தமிழகத்தை சேர்ந்த தடகள வீரர் ஜி.லட்சுமணன் நேற்று கவுரவிக்கப்பட்டார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் லட்சுமணன் 3-வதாக ஓடி வந்து (29 நிமிடம் 44.91 வினாடி) வெண்கலம் வென்றார். ஆனால் அவரது மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சிறிது நேரத்தில் அவர் ஓடுபாதையை விட்டு விலகி வெளியே காலை வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அவரை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நேற்று வழங்கி பாராட்டினார். ரத்தோர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘லட்சுமணன், ஆசிய விளையாட்டில் பதக்கம் வெல்லக்கூடிய திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறிய தொழில்நுட்ப தவறினால் தகுதிநீக்கத்திற்கு உள்ளாகி விட்டார். எது எப்படி என்றாலும் அவர் நம்முடைய சாம்பியன். நாம், நம்முடைய சாம்பியன் பக்கம் துணை நிற்க வேண்டும். அவரை சந்தித்து வாழ்த்திய இந்த தருணத்தை பெருமையாக கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். ராணுவத்தில் பணியாற்றும் 28 வயதான லட்சுமணன் புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆவார்.