பிற விளையாட்டு
துளிகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே வகையான பந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், அவ்வப்போது நாட்டு நலன் குறித்த கருத்துகளை டுவிட்டர் மூலம் பகிர்வது உண்டு. அவரை தங்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் நிறுத்த பாரதீய ஜனதா கட்சி முயற்சித்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். மேலும் அரசியலில் ஈடுபட தனக்கு ஆர்வம் இல்லை என்று பா.ஜ.க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முகமது ஷமி மீது பல்வேறு திடுக்கிடும் புகார்களை கூறினார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும் கொல்கத்தா போலீசில் புகார் தெரிவித்து இருந்தார். ஷமியின் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். இதனால் ஷமிக்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே வகையான பந்துகளை பயன்படுத்த வேண்டும் என்று எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது துரதிர்ஷ்டவசமான முடிவு என்று விமர்சித்துள்ள கவாஸ்கர், ஒரே வகை பந்துகளை பயன்படுத்தும் போது வெளிநாட்டு தொடர்களில் சவால்கள் இல்லாமல் போய் விடும் என்றும் குறிப்பிட்டார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவில் எல்.ஜி. வகை பந்தும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீசில் டியூக்ஸ் வகை பந்தும், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளில் கூக்கபுரா பந்துகளும் பயன்படுத்தப்படுகிறது.

* காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா முழு உடல்தகுதியை எட்டியுள்ளார். ஐ.பி.எல். போட்டிக்காக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் முதுகு காயம் காரணமாக இந்த சீசனிலும் இளம் வேகப்பந்து வீச்சாளர் கம்லேஷ் நாகர்கோட்டி ஆட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியும் காயத்தால் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. இதை எதிர்த்து அவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஐகோர்ட்டு தடையை நீக்கியது. ஆனால் ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்ச், தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்ரீசாந்த் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

* மகளிருக்கான பிளாக் பால் ஓபன் ஸ்குவாஷ் போட்டி எகிப்து நாட்டில் உள்ள கெய்ரோவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள நியூசிலாந்து வீராங்கனை ஜோயல்லி கிங்கை எதிர்கொண்டார். 64 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஜோஸ்னா சின்னப்பா 11-7, 10-12, 11-2, 5-11, 8-11 என்ற செட் கணக்கில் ஜோயல்லி கிங்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

* ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக கோப்பை போட்டி அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இதில் தனது சாகசத்தை வெளிக்காட்டி அசத்திய இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் ‘வால்ட்’ பிரிவின் தகுதி சுற்றில் 3-வது இடத்தை பிடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார்.