மாட்ரிட் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

Update: 2018-05-11 20:30 GMT

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மானை (அர்ஜென்டினா) தோற்கடித்தார். இதன் மூலம் களிமண் தரை ஆடுகளத்தில் நடால் தொடர்ச்சியாக 50 செட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார். ஓபன் எரா (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு ஆடுகளத்தில் தொடர்ச்சியாக அதிக செட்டுகளை வென்றவர் என்ற சிறப்பை நடால் பெற்றார். இதற்கு முன்பு 1984-ம் ஆண்டு அமெரிக்காவின் ஜான்மெக்கன்ரோ தரைவிரிப்பு ஆடுகளத்தில் (கார்பெட்) தொடர்ந்து 49 செட்டுகளை வென்றதே சாதனையாக இருந்தது. அவரது 34 ஆண்டு கால சாதனையை நடால் முறியடித்து இருக்கிறார்.

நடால் நேற்று கால்இறுதியில் 7-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார். இதில் நடால் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் கரோலினா கார்சியாவை (பிரான்ஸ்) வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

மேலும் செய்திகள்