மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கிவிடோவா ‘சாம்பியன்’

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது.

Update: 2018-05-13 21:00 GMT

மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் பெட்ரா கிவிடோவாவும் (செக்குடியரசு), கிகி பெர்டென்சும் (நெதர்லாந்து) மோதினர். 2 மணி 53 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் கிவிடோவா 7–6 (8–6), 4–6, 6–3 என்ற செட் கணக்கில் பெர்டென்சை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். இங்கு அவர் மகுடம் சூடுவது இது 3–வது முறையாகும். ஏற்கனவே 2011, 2015–ம் ஆண்டுகளிலும் பட்டம் வென்று இருக்கிறார். இதன் மூலம் மாட்ரிட் ஓபன் பட்டத்தை அதிக முறை ருசித்த வீராங்கனை என்ற சிறப்பை கிவிடோவா பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தரவரிசையில் 10–வது இடத்தில் இருந்து 8–வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

வோஸ்னியாக்கி, ‌ஷரபோவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இறுதிப்போட்டி வரை வந்த பெர்டென்ஸ் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி 15–வது இடத்தை பிடிக்கிறார். தான் விளையாடிய விதத்தை நினைத்து பெருமிதம் கொள்வதாக பெர்டென்ஸ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் செய்திகள்