பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 11–வது பட்டத்துக்கு நடால் குறி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் இன்று தொடங்குகிறது.

Update: 2018-05-26 21:15 GMT

பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் இன்று தொடங்குகிறது.

ஆதிக்கம் செலுத்தும் நடால்

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 2–வது வருவது பிரெஞ்ச் ஓபன். இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் இன்று தொடங்கி ஜூன் 10–ந்தேதி வரை நடக்கிறது. இது களிமண் தரையில் நடத்தப்படும் முக்கியமான ஒரு போட்டியாகும்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 10 முறை சாம்பியனுமான ரபெல் நடாலே (ஸ்பெயின்) இந்த முறையும் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. ‘களிமண்தரையின் ராஜா’ என்று அழைக்கப்படும் நடால் சமீபத்தில மான்ட்கார்லோ, பார்சிலோனா ஓபன் ஆகிய களிமண் தரை போட்டிகளில் வாகை சூடியிருந்தார். சூப்பர் பார்மில் உள்ள நடால் முதலாவது சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலாவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் காயத்தால் டோல்கோபோலாவ் விலகியதால் அவருக்கு பதிலாக இத்தாலி வீரர் சிமோன் போலெலி நடாலுடன் முதல் சுற்றில் மோத இருக்கிறார்.

நடாலுக்கு, ஜோகோவிச் (செர்பியா), வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), மரின் சிலிச் (குரோஷியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்), டிமிட்ரோவ் (பல்கேரியா) ஆகியோர் கடும் போட்டி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நடால் பிரெஞ்ச் ஓபனில் 11–வது பட்டத்தை வெல்ல முடியாமல் போனால் மட்டுமே ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கும். ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகிய முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் ஆடவில்லை.

செரீனா வில்லியம்ஸ்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு சாம்பியன் ஆஸ்டாபென்கோ (லாத்வியா), அண்மையில் இத்தாலி ஓபனை வசப்படுத்திய ஸ்விடோலினா (உக்ரைன்), வோஸ்னியாக்கி (டென்மார்க்), பெட்ரோவா (செக்குடியரசு), முகுருஜா (ஸ்பெயின்) உள்ளிட்டோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்கள். அதே சமயம் முன்னாள் நம்பர் ஒன் புயல் மரிய ‌ஷரபோவா (ரஷியா), குழந்தை பெற்றுக்கொண்டு களம் திரும்பியுள்ள அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் ஆகியோரையும் வாய்ப்பில் இருந்து ஓரங்கட்டி விட முடியாது.

23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான செரீனா மீண்டும் தனது தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார். ஆனால் 4–வது சுற்றில் ‌ஷரபோவாவும், செரீனாவும் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

பரிசுத்தொகை

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.309 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.17½ கோடியுடன், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைக்கும். 2–வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.8¾ கோடி வழங்கப்படும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்