பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ரபெல் நடால், முகுருஜா வெற்றி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரபெல் நடால், முகுருஜா வெற்றி பெற்றனர்.

Update: 2018-05-29 23:30 GMT
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரும், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 10 முறை வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், உலக தரவரிசையில் 127-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் சிமோன் போலிலியை சந்தித்தார்.

இதில் ரபெல் நடால் 6-4, 6-3, 0-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. நேற்று தொடர்ந்து நடந்த இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-4, 6-3, 7-6 (11-9) என்ற நேர்செட்டில் சிமோன் போலிலியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா வீரர் மரின் சிலிச் 6-3, 7-5, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 4-6, 4-6, 1-6 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீரர் ருபென் பெமிலன்ஸ்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் கனடா வீரர் டெனிஸ் ஷபலோவ், தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன், அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஜான்சன், இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட், அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர், அர்ஜென்டினா வீரர் குய்டோ பெல்லா, இத்தாலி வீரர் பாபி போக்னினி ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, 43-ம் நிலை வீராங்கனை குஸ்னெட்சோவாவை (ரஷியா) எதிர்கொண்டார். மழையால் 90 நிமிடம் பாதித்த இந்த ஆட்டத்தில் முகுருஜா 7-6 (7-0), 6-2 என்ற நேர்செட்டில் குஸ்னெட்சோவாவை சாய்த்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ஷரபோவா 6-1, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து வீராங்கனை ரிசெல் ஹான்ஜென்காம்பை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசுர் 6-2, 6-4 என்ற நேர்செட்டில் பெல்ஜியம் வீராங்கனை யனினா விக்மேயரை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (7-4), 6-4 என்ற நேர்செட்டில் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் பெதானி மாதெக் சான்ட்ஸ் (அமெரிக்கா), ஜாங் ஹூய் (சீனா), பினோ பெர்ரோ (பிரான்ஸ்), கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

மேலும் செய்திகள்