பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ரபெல் நடால், முகுருஜா 3-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

Update: 2018-05-31 22:00 GMT
பாரீஸ், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-2, 6-1, 6-1 என்ற நேர்செட்டில் அர்ஜென்டினா வீரர் குய்டோ பெல்லாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் மரின் சிலிச் (குரோஷியா), லூகாஸ் போய்லி (பிரான்ஸ்), ரிச்சர்ட் காஸ்குய்ட் (பிரான்ஸ்), பாபி போக்னினி (இத்தாலி), டோமினிச் திம் (ஆஸ்திரியா), ஸ்டீவ் ஜான்சன் (அமெரிக்கா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), கைல் எட்முன்ட் (இங்கிலாந்து), ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் ‘வைல்டு கார்டு’ வீராங்கனை பினோ பெர்ரோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

மற்ற ஆட்டங்களில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), ஷரபோவா (ரஷியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா), ரைபரிகோவா (சுலோவக்கியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

மேலும் செய்திகள்