டென்னிஸ்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், வோஸ்னியாக்கி 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச், டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கி ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
பாரீஸ்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஸ்பெயின் வீரர் ராபர்டோ பாடிஸ்டிடா அகுட்டை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-4, 6-7 (6-8), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் ராபர்டோ பாடிஸ்டிடா அகுட்டை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் (ஜெர்மனி) 6-2, 3-6, 4-6, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் போஸ்னியாவின் டாமிர் ஜூம்ஷூரை போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் உலக தவவரிசையில் 35-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ 7-6 (7-4), 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 5-ம் நிலை வீரர் கிரிகோர் டிமித்ரோவை (பல்கேரியா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி 6-3, 6-1, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜிலெஸ் சிமோனை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் 6-1, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் 20-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நோமி ஒசாகாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-0, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீராங்கனை பாலின் பார்மென்டிரை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 3-6, 5-7 என்ற நேர்செட்டில் 33-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் மிஹலா புஜார்னெஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் புதின்சேவா (கஜகஸ்தான்), டாரியா கசட்கினா (ரஷியா), பார்பரா ஸ்டைரிகோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்று தகுதி கண்டனர். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-திவிஜ் சரண் ஜோடி 5-7, 3-6 என்ற நேர்செட்டில் ஆலிவர் மாராச் (ஆஸ்திரியா)- மேட் பாவிச் (குரோஷியா) இணையிடம் தோல்வி கண்டது. கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டிமா பாபோஸ் (ஹங்கேரி) இணை 2-6, 3-6 என்ற நேர்செட்டில் ஜான் வில்லியம் பீர்ஸ் (ஆஸ்திரேலியா)- ஜாங் ஹூய் (சீனா) ஜோடியிடம் தோல்வி அடைந்தது.