பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், ஷரபோவா 4-வது சுற்றுக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஷரபோவா 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Update: 2018-06-02 23:30 GMT
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ரஷிய வீராங்கனை ஷரபோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பர் ஒன் வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 32-ம் நிலை வீரர் ரிச்சர்ட் காஸ்குய்ட்டை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். இதில் ரபெல் நடால் 6-3, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் ரிச்சர்ட் காஸ்குய்ட்டை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள பாபி போக்னினி (இத்தாலி) 6-3, 4-6, 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் 17-ம் நிலை வீரர் கைல் எட்முன்ட்டை (இங்கிலாந்து) போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 3 மணி 34 நிமிடம் நீடித்தது.

இன்னொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் டிகோ ஸ்வார்ட்ஸ்மேன் 7-5, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் குரோஷியா வீரர் போர்னா கோரிச்சை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் மேக்ஸ்மில்லியன் மெர்டெர்ரெர் 6-2, 6-1, 6-4 என்ற நேர்செட்டில் எஸ்தோனியா வீரர் ஜூர்ஜென் ஜோப்பை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ரஷிய வீரர் காரென் காசனோவ் 6-3, 7-5, 6-3 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் லூகாஸ் போய்லியை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 6-7 (6-8), 6-3, 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் மான்பில்சை சாய்த்து 4-வது சுற்றுக்கு தகுதி கண்டார்.

மற்ற ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன், குரோஷியா வீரர் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-0, 6-2 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை சமந்தா ஸ்டோசுரை எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா 6-2, 6-1 என்ற நேர்செட்டில் 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எளிதில் வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-7 (6-8), 6-7 (4-7) நேர்செட்டில் 24-ம் நிலை வீராங்கனை அனெட் கொன்டாவெய்ட்டிடம் (எஸ்தோனியா) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்ற ஆட்டங்களில் சலோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), லிசி சுரெங்கோ (உக்ரைன்), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி 6-4, 7-6 (7-1) என்ற நேர்செட்டில் லூகாஸ் குபோட் (போலந்து)-மார்செலோ செலோ (பிரேசில்) இணையை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்