டென்னிஸ்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ருமேனியா வீராங்கனை ஹாலெப் ‘சாம்பியன்’ இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்சை வீழ்த்தினார்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை ஹாலெப், அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
பாரீஸ், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ருமேனியா வீராங்கனை ஹாலெப், அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.ஹாலெப் ‘சாம்பியன்’ ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 10–ம் நிலை வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மல்லுகட்டினர்.பரபரப்பான இந்த மோதலில் இருவரும் ஆக்ரோ‌ஷமாக மட்டையை சுழட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். முதல் செட்டை இழந்த ஹாலெப், அடுத்த செட்டில் போராடி மீண்டார். ஆனால் கடைசி செட்டில் ஹாலெப்பின் ஆதிக்கத்தை ஸ்டீபன்சால் துளியும் தடுக்க முடியவில்லை.2 மணி 3 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் ஹாலெப் 3–6, 6–4, 6–1 என்ற செட் கணக்கில் ஸ்டீபன்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.ரூ.17½ கோடி பரிசு 26 வயதான ஹாலெப் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு அவர் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் (2014 மற்றும் 2017–ல் பிரெஞ்ச் ஓபன், 2018–ல் ஆஸ்திரேலிய ஓபன்) தோற்று இருந்தார். ஒரு வழியாக நீண்ட கால ஏக்கத்தை தணித்துக் கொண்டார். அத்துடன் 1978–ம் ஆண்டுக்கு பிறகு பிரெஞ்ச் ஓபனை தனதாக்கிய முதல் ருமேனியா வீராங்கனை என்ற மகிமையை ஹாலெப் பெற்றார்.பட்டத்தை அறுவடை செய்த ஹாலெப்புக்கு ரூ.17½ கோடியும், 2–வது இடத்தை பிடித்த ஸ்டீபன்ஸ் ரூ.8¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.நடால்–டொமினிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 8–ம் நிலை வீரர் டொமினிக் திம்மும் (ஆஸ்திரியா) மோதுகிறார்கள்.‘களிமண்’ தரையின் ராஜாவான நடால் இதற்கு முன்பு 10 முறை பிரெஞ்ச் ஓபனை வென்று இருக்கிறார். இந்த முறையும் வாகை சூடினால், குறிப்பிட்ட கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 11 முறை வசப்படுத்திய 2–வது நபர் என்ற சிறப்பை பெறுவார். ஏற்கனவே ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை மார்கரெட் கோர்ட் ஆஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்ற சாதனையாளராக திகழ்கிறார்.அதே சமயம் 24 வயதான டொமினிக் திம் வெற்றி பெற்றால், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய 2–வது ஆஸ்திரியா நாட்டவர் என்ற மகத்தான பெருமையை சொந்தமாக்கிக் கொள்வார்.இருவரும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்து உள்ளனர். இதில் 6–ல் நடாலும், 3–ல் டொமினிக் திம்மும் வெற்றி கண்டுள்ளனர். கடைசியாக கடந்த மாதம் மாட்ரிட் ஓபனில் மோதிய போது அதில் டொமினிக் திம் நேர் செட்டில் நடாலை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.‘டென்னிஸ் விளையாட தொடங்கியதில் இருந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்த கனவு எனக்கு பிடித்த நகரமான பாரீசில் நனவாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதை என்னால் நம்பவே முடியவில்லை’–ஹாலெப்.