விம்பிள்டன் டென்னிஸ்: நடால், முகுருஜா எளிதில் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், முகுருஜா தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

Update: 2018-07-03 21:00 GMT

லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடால், முகுருஜா தங்களது முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

நடால் அபாரம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. 2–வது நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடால் தனது முதல் சுற்றில் 6–3, 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் துடிசெலாவை (இஸ்ரேல்) எளிதில் வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். 7–ம் நிலை வீரர் ஆஸ்திரியாவின் டொமினிக் திம் 4–6, 5–7, 0–2 என்ற செட் கணக்கில் பாக்தாதிசுக்கு எதிராக (சைப்ரஸ்) பின்தங்கி இருந்த போது முதுகு வலி காரணமாக விலகினார். இதனால் பாக்தாதிஸ் 2–வது சுற்றை எட்டினார்.

ஒற்றையர் பிரிவில் களம் இறங்கிய ஒரே இந்தியரான யுகி பாம்ப்ரி முதல் சுற்றில் 6–2, 3–6, 3–6, 2–6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் தாமஸ் பாபியானோவுடன் வீழ்ந்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் எந்த வெற்றியும் பெறாத யுகி பாம்ப்ரி 5–வது முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியிருக்கிறார்.

அதே சமயம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டெல் போட்ரோ (அர்ஜென்டினா), கைல் எட்மன்ட் (இங்கிலாந்து) உள்ளிட்டோர் முதல் தடையை எளிதில் கடந்தனர்.

கிவிடோவா தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6–2, 7–5 என்ற நேர் செட்டில் நவோமி பிராடியை (இங்கிலாந்து) விரட்டியடித்து 2–வது சுற்றுக்கு முன்னேறினார். ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), சிபுல்கோவா (சுலோவக்கியா), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

2011, 2014–ம் ஆண்டு சாம்பியனான கிவிடோவா (செக்குடியரசு) 4–6, 6–4, 0–6 என்ற செட் கணக்கில் சாஸ்னோவிச்சிடம் (பெலாரஸ்) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார்.

மேலும் செய்திகள்