விம்பிள்டன் டென்னிஸ்: செரீனாவை வீழ்த்தி கெர்பர் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனாவை வீழ்த்தி கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் ஆண்கள் அரைஇறுதியில் ஆண்டர்சன், ஜோகோவிச் ஆகியோர் போராடி வெற்றிபெற்றனர்.

Update: 2018-07-14 23:15 GMT
லண்டன்,

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை கெர்பர் நேர் செட்டில் செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), 7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்சுடன் (அமெரிக்கா) மோதினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் செரீனாவை மிரள வைத்து விம்பிள்டன் பட்டத்தை முதல்முறையாக தட்டிச் சென்றார். இந்த ஆட்டம் 65 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. இதன் மூலம் 2016-ம் ஆண்டு விம்பிள்டன் இறுதிசுற்றில் செரீனாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

1996-ம் ஆண்டு ஸ்டெபிகிராப்புக்கு பிறகு இந்த பட்டத்தை அறுவடை செய்த முதல் ஜெர்மனி வீராங்கனை என்ற பெருமையை கெர்பர் பெற்றார்.

தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் 30 வயதான கெர்பர் சுவைத்த 3-வது கிராண்ட்ஸ்லாம் மகுடம் இதுவாகும். ஏற்கனவே 2016-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபனை வென்று இருந்தார். பட்டத்தை வசப்படுத்திய கெர்பருக்கு ரூ.20¼ கோடியும், 2-வது இடத்தை பிடித்த செரீனாவுக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

முன்னதாக நேற்று முன்தினம் நடந்த கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா)- ஜான் இஸ்னர் (அமெரிக்கா) இடையிலான ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ரசிகர்களை பரவசப்படுத்தியது. இதில் இருவரும் தலா 2 செட் வீதம் கைப்பற்றிய நிலையில் கடைசி செட்டில் தங்களது சர்வீஸ்களை மட்டும் புள்ளிகளாக மாற்றி வண்ணம் இருந்ததால், ஆட்டம் ‘அனுமார் வால்’ போல் நீண்டு கொண்டே போனது. ஒரு வழியாக கெவின் ஆண்டர்சன், இஸ்னரின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்து 7-6 (8-6), 6-7 (5-7), 6-7 (9-11), 6-4, 26-24 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மொத்தம் 102 ஏஸ் சர்வீஸ்கள் விளாசப்பட்ட இந்த ஆட்டம் 6 மணி 35 நிமிடங்கள் நடந்தது. இதில் கடைசி செட் போராட்டம் 2 மணி 55 நிமிடங்கள் நீடித்தது.

விம்பிள்டன் வரலாற்றில் நீண்ட நேரம் நடந்த 2-வது ஆட்டம் இதுவாகும். இதற்கு முன்பு இதே ஜான் இஸ்னர், பிரான்சின் நிகோலஸ் மகுத்துக்கு எதிராக 2010-ம் ஆண்டு விம்பிள்டன் முதல் சுற்றில் 11 மணி 5 நிமிடங்கள் மல்லுகட்டி வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.

மற்றொரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்)- ஜோகோவிச் (செர்பியா) சந்தித்தனர். முந்தைய நாள் பாதியில் நிறுத்தப்பட்டு நேற்று தொடர்ந்து நடந்த இந்த ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான ஜோகோவிச் 6-4, 3-6, 7-6 (11-9), 3-6, 10-8 என்ற செட் கணக்கில் நடாலுக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 5 மணி 15 நிமிடங்கள் நடந்தது. இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்- கெவின் ஆண்டர்சன் மோதுகிறார்கள்.

மேலும் செய்திகள்