சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அரைஇறுதியில் பெடரர், ஜோகோவிச்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், செர்பியா வீரர் ஜோகோவிச் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

Update: 2018-08-18 22:30 GMT

சின்சினாட்டி, 

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், செர்பியா வீரர் ஜோகோவிச் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.

பெடரர் வெற்றி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருப்பவரும், 7 முறை இந்த பட்டத்தை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–7 (2–7), 7–6 (8–6), 6–2 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரர் வாவ்ரிங்காவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 11–வது இடத்தில் உள்ள டேவிட் கோபின் (பெல்ஜியம்) 7–6 (7–5), 7–6 (7–4) என்ற நேர்செட்டில் 3–ம் நிலை வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அரைஇறுதியில் டேவிட் கோபின், பெடரரை சந்திக்கிறார்.

அரைஇறுதியில் ஜோகோவிச்

இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா) 7–5, 4–6, 6–3 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டத்தில் பின்தங்கி இருந்த ஒரு கட்டத்தில் ஜோகோவிச் ஆத்திரத்தில் தனது ராக்கெட்டை உடைத்து எறிந்தார். அதன் பிறகு ஆக்ரோ‌ஷமாக ஆடிய அவரது ஆட்டத்தில் ஏற்றம் ஏற்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா வீரர் மரின் சிலிச் 7–6 (9–7), 6–4 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாப்லோ கார்ரினா பஸ்தாவை பதம் பார்த்து அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதியில் மரின் சிலிச்–ஜோகோவிச் ஆகியோர் மோதுகிறார்கள்.

சிமோனா ஹாலெப் அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா ஹலெப் (ருமேனியா) 6–4, 6–1 என்ற நேர்செட்டில் லிசி சுரென்கோவை (உக்ரைன்) எளிதில் தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை சந்திக்கிறார்.

இன்னொரு கால்இறுதியில் கிவிடோவா (செக் குடியரசு) 7–5, 5–7, 6–3 என்ற செட் கணக்கில் எலிஸ் மெர்டென்சை (பெல்ஜியம்) வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அரைஇறுதியில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) எதிர்கொள்கிறார்.

மேலும் செய்திகள்