அமெரிக்க ஓபன் டென்னிஸ் வீனசை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார், செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது அக்காள் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

Update: 2018-09-01 22:00 GMT

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தனது அக்காள் வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

ரபெல் நடால் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

போட்டியின் 5–வது நாளான நேற்று முன்தினம் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 5–7, 7–5, 7–6 (9–7), 7–6 (7–3) என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் கச்சனோவை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார்.

வாவ்ரிங்கா தோல்வி

மற்றொரு ஆட்டத்தில் கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக் 7–6 (8–6), 6–4, 6–3 என்ற நேர்செட்டில் முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்காவை (சுவிட்சர்லாந்து) சாய்த்து 4–வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் ஜூவான் டெல்போட்ரோ (அர்ஜென்டினா), கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), போர்னா கோரிச் (குரோஷியா) ஆகியோர் வெற்றி கண்டனர்.

4–வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6–1, 6–2 என்ற நேர்செட்டில் தனது அக்காளும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை எளிதில் தோற்கடித்து 4–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த வெற்றியை பெற செரீனாவுக்கு 71 நிமிடமே தேவைப்பட்டது. வீனசுடன் 30–வது முறையாக மோதிய செரீனா பெற்ற 18–வது வெற்றி இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6–3, 6–4 என்ற நேர்செட்டில் விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தி 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), செவஸ்தோவா (லாத்வியா), கனேபி (எஸ்தோனியா), ஆஷ்லிக் பார்ட்டி (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

ரோகன் போபண்ணா ஜோடி முன்னேற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)–ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) ஜோடி 6–4, 6–4 என்ற நேர்செட்டில் மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா)–ஜாக்சன் வித்ரோ (அமெரிக்கா) இணையை தோற்கடித்து 3–வது சுற்றுக்கு முன்னேறியது.

மேலும் செய்திகள்